கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 72 பெயர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து 82 பெயர்கள் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் அக்கட்சி வெளியிட்டது. அதில், பல ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 59 பெயர்கள் கொண்ட மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.


சுரங்க அதிபரான கருணாகர் ரெட்டிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரின் பெயர் இரண்டாம் கட்ட பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இதுவரை 213 இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ள முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து கோபால் ராவ் என்பவர் போட்டியிட உள்ளார். 


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் முதற்கட்டமான 126 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 57 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.