சத்குரு தொடக்கிய Isha Insight நிகழ்ச்சியில் Bigbasket CEO பகிர்ந்த வெற்றி அனுபவம்.!
300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்
300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது. தொடக்க நாளான நேற்று பிரபல ஆன்லைன் மளிகை நிறுவனமான பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனத்தின் சி.இ.ஓ. திரு. ஹரி மேனன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், “கடந்த மார்ச் மாதத்தில் தேசிய அளவில் லாக்டவுன் (Lockdown) அறிவிக்கப்பட்ட போது வெறும் இரண்டே நாட்களில் 80 சதவீத ஊழியர்களை நாங்கள் இழந்தோம். அப்போது ஸ்தம்பித்து போயிருந்தோம். தொடர்ந்து வரும் ஆர்டர்களை சாமளிக்கவும், சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்காகவும் 16 நாட்களில் 12,300 பேரை வேலைக்கு எடுத்தோம். முறையான தகவல் பரிமாற்றும் திறன் இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதில் சமாளிக்கலாம்” என கூறினார்.
மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளும் கடைசி நபராக இருக்க விரும்புகிறேன்: சத்குரு
அத்துடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் பேசும் போது, “ஒரு நிறுவனமானது புதிய, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்காக, எங்களது பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் நாங்கள் முதல் வேலையாக, சிறப்பான பயிற்சி மற்றும் புதுமைகளை கண்டுப்பிடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கினோம். தொழில்நுட்பங்களை புரிந்து கொள்வதைகாட்டிலும், கலாச்சாரத்தின் கூறுகளையும், மக்களை நிர்வகிக்கும் திறனையும் கற்றுக்கொள்வதற்கு சற்றே கடினம். இதுபோன்ற விஷயங்களை நாம் சரியாக கையாண்டால், நம் நிறுவனம் நடைப்போடும் பாதையை நம்மால் தீர்மானிக்க முடியும்” என்றார்.
அமெரிக்காவில் உள்ள ஈஷா (Isha) உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து ஆன்லைன் நேரலையில் பேசிய சத்குரு, “மனிதர்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு மிக்க செயல்களின் மூலம் இந்த கொரோனா பெருந்தொற்று பாதிப்பை நாம் கடந்து செல்ல முடியும். தலைவராக உங்களுக்கு நுண்ணறிவு மிக அவசியம். ஆழமான தெளிவான பார்வையின் மூலம் இந்த நுண்ணறிவை நீங்கள் பெற முடியும்” என்றார்.
இரண்டாம் நாளான இன்று iSPIRT அறக்கட்டளையின் இணை நிறுவனர் திரு.சரத் சர்மா அவர்கள், “இந்தியாவில் மருத்துவத் துறையில் நிகழும் மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள்” குறித்து பேசினார்.
பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.வருண் பெர்ரி, ஜிபிலாண்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. திரு.அஜய் கவுலுடன் கலந்துரையாடினார்.
‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரிலான வர்த்தக தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, பத்ம பூஷண் விருது வென்ற பெண் தொழிலதிபர் திருமதி.கிரண் மசூம்தார் ஷா மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கான New Development வங்கியின் முன்னாள் தலைவர் திரு.கே.வி.காமத் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடங்கப்பட்டது சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் ..!!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR