வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்
Bangladesh Crisis: இந்த வன்முறை வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்திய மக்களின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் இதன் தாக்கம் தெரியும்.
Bangaladesh Violence: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் பற்றி எரிகிறது. அந்த நாடு முழுவதும் வன்முறைத் தீ பரவி வருகிறது. இதனால் வங்கதேசத்தின் நிலை தினம் தினம் மோசமாகிக்கொண்டு இருக்கின்றது. அங்கு பதற்றமும் பீதியும் உள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வங்கதேச வன்முறையின் தாக்கம் எல்லை தாண்டியும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே சுமார் 4096.70 கி.மீ. நீண்ட சர்வதேச எல்லை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பாரம்பரிய ஒற்றுமைகளும் உள்ளன. இறக்குமதி, ஏற்றுமதி என இரு நாருகளுக்கு இடையே பெரிய அளவிலான முதலீடுகளும், வியாபார தொடர்புகளும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை இந்தியாவை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் வியாபார, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும் என்பது உறுதி.
வங்கதேசத்தில் அதிகரித்த வன்முறை
வங்கதேசத்தில் அதிகரித்த வன்முறை காரணமாக, வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை உண்டானது. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டியதாயிற்று. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியா வந்தடைந்தார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட வன்முறையால் இந்தியாவிலும் எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட சில பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் மோசமாகும் பொருளாதார நிலை
வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையால் உருவான மோசமான நிலைக்கு மத்தியில் வணிகத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அந்நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் ஒவ்வொரு நாளும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேலான ஏற்றுமதி இறக்குமதி மீது தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீண்ட காலம் நீடித்தால் நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகலாம்.
வங்கதேச வன்முறை: இந்தியாவிலும் பாதிப்பு
இந்த வன்முறை வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இந்திய மக்களின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் இதன் தாக்கம் தெரியும். நிலைமை மோசமடைந்தால் ஏற்றுமதி பாதிக்கப்படுவது உறுதி.
வங்கதேசத்தில் ஸ்தம்பித்த வர்த்தகம், மூடப்பட்ட தொழிற்சாலைகள்
வங்கதேசத்தில் வன்முறை காரணமாக வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இறக்குமதி-ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் மூடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், வணிகமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிடங்கில் காத்திருக்கும் பொருட்கள்
வங்கதேச கிடங்குகளில் பொருட்கள் தயாராக உள்ளன, ஆனால் வன்முறை காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. கிடங்கில் இருந்து பொருட்களை வெளியே எடுத்து அனுப்ப முயற்சித்தால், ஆங்காங்கே நடக்கும் தீ வைப்பு சம்பவங்கள், வன்முறை ஆகியவற்றின் காரணமாக தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான சிட்டகாங்கில் சரக்குகள் கண்டெய்னர்களில் சிக்கியுள்ளன. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் இந்த பொருட்களின் விலை உயரத் தொடங்கும்.
மேலும் படிக்க | பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்... கொந்தளித்த நெட்டிசன்கள்
பிரபல ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு
வங்கதேசம் உயர்தர ரெடிமேட் ஆடைகளை தயாரிப்பதில் பிரபலமானது. இங்கு மலிவான ஊதியத்தில் வேலைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் ஆடைகளை வங்கதேசத்தில் தயாரிக்கின்றன. இந்தியாவின் பெரிய பிராண்டுகளும் தங்கள் ஆடைகளை வங்கதேசத்தில் தயாரிக்கின்றன அல்லது மூலப்பொருளை அங்கிருந்து பெறுகின்றன. இந்த நிலையில், இந்த வன்முறை அவர்களின் வணிகத்தையும், வங்கதேசத்திலிருந்து வரும் பொருட்களின் வரத்தையும் பாதிக்கும்.
வங்கதேசத்திலிர்ந்து இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்கள்
இந்தியா வங்கதேசத்திலிருந்து ஜவுளி, ரெடிமேட் ஆடைகள், சணல், சணல் பொருட்கள், தோல் பொருட்கள், மருந்துகள், பீங்கான் பாத்திரங்கள், விவசாய பொருட்கள், மீன் வகைகள், காய்கறிகள், எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறை காரணமாக இந்த பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படலாம், இதன் விளைவாக இந்தியாவில் இந்த பொருட்களின் விலை உயரக்கூடும்.
வங்கதேசத்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்கள்
இந்தியா வங்கதேசத்திற்கு 6052 பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வங்கதேசம் மட்டும் 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அரிசி, பருத்தி, பருத்தி துணி, கோதுமை, மசாலா பொருட்கள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பல வித பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. வங்கதேசத்தில் வன்முறை இன்னும் சில நாட்களில் சரியாகவில்லை என்றால், இந்தியாவில் பல பொருட்களின் விலை உயரலாம். இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 12.9 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் வரத்தை விட தேவை அதிகமாகும்
வங்கதேசத்திலிருந்து செய்யப்படும் இறக்குமதி பாதிக்கப்பட்டால், பொருட்களின் வரத்தை விட தேவை அதிகமாகும். அந்த நிலையில், இவற்றின் விலை வெகுவாக அதிகரிக்கலாம். இது தவிர, பல இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில் பெரிய முதலீடுகளை செய்துள்ளன. இந்த வன்முறையால் அந்த நிறுவனங்களின் கவலையும் அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழலால் இந்த நிறுவனங்கள் அங்கு செயல்படுத்திக்கொண்டு இருக்கும் திட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தையும் சிக்கலையும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில், மின்சாரம், ஜவுளி, மருந்துகள் போன்ற துறைகளில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன. தற்போது வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழலால் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைப் பற்றி கவலைகொள்ளத் தொடங்கியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ