Khaleda Zia: வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோடிய நிலையில், அவரது எதிரியான கலீதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நிலவி வருகிறது. அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பமான இந்த போராட்டம், வன்முறையாக மாறி பல மாணவர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது.
இந்நிலையில், திங்களன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது டெல்லியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அவர் விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அவரச அமைச்சரவை கூட்டத்தில் வங்கதேச அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகிய அடுத்த சில மணி நேரங்களில், அவரது எதிரியும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் ஏற்படுத்தி உள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. 78 வயதான இவர் கடந்த 2018 முதல் சிறையில் உள்ளார். சமீபத்தில் கலீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.