செய்கூலி சேதாரம் இல்லாமலும் தங்கம் வாங்குவது எப்படி? லாபத்தை கொட்டும் Gold ETF முதலீடு
Gold ETF Investment: தங்கத்தை அதிக செய்கூலி, சேதாரம் கொடுத்து வாங்குகிறீர்களா... அப்படியென்றால் நீங்கள் இந்த Gold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
Gold ETF Investment: இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் சேமிப்பு குறித்தும், முதலீடு குறித்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நல்ல விழிப்புணர்வை கொண்டுள்ளனர். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை நம்பிக்கையளிக்கும் இடத்தில் முதலீடு செய்துவைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
எதிர்கால தேவைகளுக்கும், அவசர கால தேவைகளுக்கு என பல காரணங்களுக்காக மக்கள் முதலீட்டையும், சேமிப்பையும் மேற்கொள்வதால் அவர்கள் அதிக ரிஸ்க் உள்ள இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். அப்படியிருக்க, தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என மக்கள் பெரிதும் நம்புகின்றனர். தங்கத்தின் விலையும் உயர்ந்துகொண்ட இருக்க, மக்கள் அதில் முதலீடு செய்யும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை...
சென்னை தங்கம் நேற்றைய (டிச. 23) நிலவரப்படி, ஒரு கிராம் 7,099 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56,792 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த தங்கத்தின் விலை கடந்தாண்டு டிச. 23ஆம் தேதி ஒரு கிராம் 5,820 ரூபாயாக இருந்தது. அதாவது, கடந்த ஓராண்டில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1,279 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு டிச.23ஆம் தேதி நீங்கள் 10 கிராம் அளவிற்கு தங்கம் வாங்கியிருந்தால் உங்களுக்கு 12,790 ரூபாய் லாபம் எனலாம்.
Gold ETF பற்றி தெரியுமா?
இந்தளவிற்கு தங்கம் பாதுகாப்பை கொடுப்பதால்தான் மக்கள் தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வது என்றால் நகைகளை மட்டும் வாங்க வேண்டும் என்றில்லை. தங்கத்தை நீங்கள் நகையாக இல்லாமல் சிறிது சிறிதாக கூட வாங்கிச் சேமிக்கலாம். ஆம், Gold ETF மூலம் நீங்கள் முதலீட்டை மேற்கொள்வதால் சிறிது சிறிதாகவும் தங்கம் வாங்கலாம், நகைகளை வாங்குவதை விட சில நன்மைகளும் இதில் இருக்கின்றன. அந்த வகையில், Gold ETF என்றால் என்ன, அதில் முதலீடு செய்வது எப்படி, அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Gold ETF என்றால் என்ன?
பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது போன்று, அங்கு தங்கத்தை வாங்குவதே Gold ETF. இந்த Exchange Traded Fund என்பது தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து மாறும். இதுவும் மியூச்சுல் பண்ட் திட்டத்தில் ஒன்றுதான். இதில் நீங்கள் தங்கத்தை யூனிட்டாக வாங்குவீர்கள். இதில் உங்கள் கைகளுக்கு தங்கம் வராது என்றாலும், நீங்கள் தங்கத்தை மதிப்பில் இந்த ETF பங்கை வாங்குவீர்கள். இந்த பங்கின் விலை தங்கத்தின் விலையை ஒட்டியே இருக்கும்.
Gold ETF: முதலீடு செய்வது எப்படி?
தங்கத்தில் முதலீடு செய்வதில் இதுவே குறைந்த விலையில் செய்யக்கூடியது. நீங்கள் 1 யூனிட்டாக கூட இதை வாங்கலாம். இதை பங்குகளை வாங்குவது, விற்பது போல் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தையிலேயே மேற்கொள்ளலாம். ஆனால், இதற்கு உங்களுக்கு Demat கணக்கு தேவை என்பதை மட்டும் நினைவில்வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தியர்களின் நம்பிக்கையை பெறும் Gold ETF
இது பாதுகாப்பானதா என சிலர் யோசிக்கலாம். கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியர்கள் இந்த Gold ETF பங்குகளில் சுமார் ரூ.1,482 கோடி அளவில் முதலீடு செய்துள்ளனர். இருப்பினும் இது கடந்த அக்டோபர் மாதத்தை விட குறைவுதான். தற்போது சந்தை சற்று வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீடும் சரிந்திருக்கலாம். அக்டோபர் மாதம் மட்டும் இந்த Gold ETF பங்குகளில் சுமார் ரூ.1,961 கோடியும், அதற்கு முன் செப்டம்பரில் ரூ.1,233 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமே நீங்கள் தெரிந்துகொள்ளலாம், எந்தளவிற்கு இது தற்போது மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என... தொடர்ந்து இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை காண முடிகிறது.
மேலும் படிக்க | உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்! எவ்வளவு பணம் வேணாலும் போடுங்க
Gold ETF நன்மைகள்
- சிறிது சிறதாக கூட தங்கம் வாங்கலாம்: அதாவது இதில் ஒரு கிராமுக்கும் குறைவாக கூட தங்கம் வாங்கலாம். SIP மூலம் உங்களுக்கு ஏதுவான தொகையில், ஏதுவான காலகட்டத்தில் இந்த தங்கத்தை நீங்கள் வாங்கலாம். நகைக்கடைகளில் ஒரு கிராமுக்கு உங்களால் தங்கக் காசை மட்டுமே வாங்க முடியும். ஆனால், இங்கு அதற்கும் குறைவாகவும் நீங்கள் வாங்கி உங்களின் முதலீட்டை தொடங்கலாம்.
- தரமான தங்கத்தை வாங்கலாம்: லண்டன் புல்லியன் சந்தை சங்கம் என்பதுதான் உலகளவில் தங்கத்திற்கு பொறுப்புடைய அமைப்பாகும். அந்த நெறிமுறைகள் அனைத்தும் இந்த Gold ETF முதலீட்டில் பின்பற்றப்படுவதால், இவை வெளிப்படுத்தன்மையுடனும், சமதன்மையுடனும் இருக்கும். நகைக்கடைகளில் நீங்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விலையில் தங்கத்தை வாங்க வேண்டும். இங்கு அப்படியில்லை. எல்லோருக்கும் 99.5% தூய்மையான தங்கம், ஒரே விலையில் வழங்கப்படும். இதுதான் உச்சபட்ச தூய்மையான தங்கமாகும்.
- தங்கமும் பாதுகாப்பாக இருக்கும்: இந்த தங்கம் உங்களின் Demat கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, நீங்கள் Demat கணக்கிற்கு மட்டும் வருடாந்திர கட்டணத்தை செலுத்தினால் போதும். அது ஒவ்வொரு முதலீட்டு செயலிகளிலும் வெவ்வேறாக இருக்கும். ஆனால், மறுபுறம் நீங்கள் தங்கத்தை நகையாக வாங்கினால் அதனை வீட்டில் வைப்பதும் பாதுகாப்பில்லை. வங்கி லாக்கரில் வைத்தால் அதற்கான கட்டணமும் இதை ஒப்பிடும்போது அதிகமாகும்.
- இதை அடமானமும் வைக்கலாம்: குறிப்பாக, Gold ETF பங்கை உங்களால் எளிதாக விற்று, அதை பணமாக்க முடியும். சந்தை நேரத்தில் நீங்கள் விற்றால், விரைவாக உங்களின் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும். Gold ETF பங்கை அடமானுமும் வைத்து நீங்கள் லோன் வாங்கலாம்.
- செய்கூலியே கிடையாது: நீங்கள் நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்கினால் சுமார் 8% முதல் 30% வரை செய்கூலி கொடுக்க வேண்டும். தங்கக்கட்டியாக வாங்கினாலும் அதே நிலைதான். அப்படியிருக்க Gold ETF பங்கில் 1% அல்லது அதற்கும் குறைவான தரகு கட்டணம் மற்றும் 1% வருடாந்திர அளவில் portfolio management கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும். இது உங்களுக்கு அதிக சேமிப்பை தரும்.
சில Gold ETF பங்குகள்...
தற்போது சந்தையில் பல்வேறு Gold ETF உள்ளன அவற்றில் சிலவற்றையும், அதன் கடந்தகாலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த லாபத்தையும் காணலாம். (Source: Grow App - டிசம்பர் 23)
- Nippon Gold ETF: கடந்த ஒரு வருடத்தில் 20% லாபத்தையும், கடந்த 3 வருடத்தில் 52% லாபத்தையும், கடந்த 5 வருடத்தில் 90% லாபத்தையும் வழங்கி உள்ளது.
- SBI Gold ETF: கடந்த ஒரு வருடத்தில் 24% லாபத்தையும், கடந்த 3 வருடத்தில் 54% லாபத்தையும், கடந்த 5 வருடத்தில் 92% லாபத்தையும் வழங்கி உள்ளது.
- Axis Gold ETF: கடந்த ஒரு வருடத்தில் 20% லாபத்தையும், கடந்த 3 வருடத்தில் 54% லாபத்தையும், கடந்த 5 வருடத்தில் 90% லாபத்தையும் வழங்கி உள்ளது.
- ICICI Prudential Gold ETF: கடந்த ஒரு வருடத்தில் 21% லாபத்தையும், கடந்த 3 வருடத்தில் 55% லாபத்தையும், கடந்த 5 வருடத்தில் 105% லாபத்தையும் வழங்கி உள்ளது.
- Birla Sun Life Gold ETF: கடந்த ஒரு வருடத்தில் 19% லாபத்தையும், கடந்த 3 வருடத்தில் 54% லாபத்தையும், கடந்த 5 வருடத்தில் 92% லாபத்தையும் வழங்கி உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையின் நோக்கம் Gold ETF குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிப்பது மட்டும். இது முதலீட்டுக்கான அறிவுரை கிடையாது என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை பின்பற்றும் முன் நிதி ஆலோசகரை சந்தித்து தக்க ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ