பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தியதன் மூலம் தமிழகம் சுமார் ரூ.2,500 கோடி வருவாய் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.25 மற்றும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.50 விலை ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ரூ.2,500 கோடி வரை தமிழக அரசு வருவாய் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னதாக வாட் வரி உயர்வு குறித்து வெளியான அறிவிப்பில்., உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போது மாநில வருவாய் பாதுகாக்கப்படுவதோடு, நுகர்வோரின் நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில் வாட் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியுள்ளது.


இருப்பினும், மாநில அரசு ரூ.2,500 கோடி இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது, ஏனெனில் விற்பனை நிலையங்களில் விற்பனை சுமார் 85 சதவீதம் குறைந்துவிட்டது, மேலும் சாதாரண விற்பனை நிலைகள் எப்போது மீண்டும் வரும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.


"தமிழ்நாட்டில் சுமார் 5,000 எண்ணெய் விற்பனை நிலையங்கள் உள்ளன, இங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 4,000 - 5,000 லிட்டர் விற்பனை இருக்கும், மாதாந்திர உற்பத்தி மாதத்திற்கு 150,000 லிட்டராக இருக்கும்" என்று இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.சுரேஷ்குமார் தெரிவிக்கின்றார்.


ஆனால் தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக விற்பனை ஒரு நாளைக்கு 80-85 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மதியம் 1 மணிக்கு விற்பனையை நிறுத்துமாறு மாவட்ட அதிகாரிகள் விற்பனை நிலையங்களை கேட்டுக்கொள்வதால் விற்பனை நிலையங்கள் செயல்படுவதில் குழப்பமும் நீடிக்கிறது. இப்படி இருக்கையில் விற்பனை அளவு வேகமாக உயராது, மற்றும் இயல்பு நிலை விற்பனை எப்போது துவங்கும் என்பதும் கேள்விகுறியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.