தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக்கட்சியினர் மறியல் போராட்டத்தால் ரயில் மற்றும் பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.


மதுரையில் நாகர்கோவில்-மும்பை ரயிலை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 


அதே போன்று திருநெல்வேலி தாமிரபரணி ஆற்று ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


அரியலூ மாவட்டம் செந்துறை அருகே மாத்தூரில் கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை மறித்து திமுக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.


மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலால் புறநகர் ரயில் உட்பட 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும், மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்வதற்காக ஸ்டாலினை குண்டுக்கட்டமாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.