கிருஷ்ணகிரி அணையில் பழுதான முதல் மதகையினை ஓரிரு நாட்களில் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதை அடுத்து, அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழுதான முதல் மதகையினை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால்  நொடிக்கு 1600 கனஅடி தண்ணீர் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணையின் முழுக் கொள்ளளவு 52 அடியாகும். கடந்தாண்டு நவம்பர் மாதம் அணை முழுக் கொள்ளளவும் நிரம்பிய நிலையில் முதல் மதகின் மேற்பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியது.


தற்போதைய நிலவரப்படி அணையில் 38 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நொடிக்கு 662 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் பழுதான முதல் மதகை சீரமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது.


பழுதான மதகையினை சீரமைக்க வேண்டுமெனில், அணையின் நீர்மட்டம் 32 அடியாகக் குறைக்க வேண்டும். எனவே அணையின் 3 மதகுகளில் இருந்து நொடிக்கு 1600 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் கூடுதலாக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்திறப்பு மூலம் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது!