வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!!
காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு காணப்படுகிறது. இதுதவிர, வெப்பச்சலனம் காரணமாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னல் காணப்படும் என்றார் அவர்.
விளாத்திகுளத்தில் 110 மி.மீ.: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. சிவகங்கையில் 110 மி.மீ., தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, நீலகிரி மாவட்டம் குன்னூர், போடிநாயக்கனூரில் தலா 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நாகர்கோவில், ராமநாதபுரம் கமுதியில் தலா 50 மி.மீ., கோவில்பட்டி, பூதப்பாண்டி, கழுகுமலையில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.
கரூர் பரமத்தியில் 101 டிகிரி: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும், சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக உள்ளது. குறிப்பாக மத்திய,மேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. சனிக்கிழமை அன்று கரூர் பரமத்தி, சேலம், திருத்தணியில் தலா 101 டிகிரியும், கோவை, தர்மபுரி, திருச்சியில் தலா 99 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.