தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!!
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:---
தமிழகத்தில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாலத்தீவு, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அண்மையில் மழை பெய்தது.
இந்நிலையில், வெப்பச் சலனம் தொடர்ந்து வருவதன் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியின் கடலோரத்தில் வறண்ட வானிலையே காணப்படும்.