சபரிமலை கோவிலில் வருகிற 5-ம் தேதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


அனைத்து வயதினரையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.


இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் போலீஸார் கடந்த 2 நாட்களாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், மாநிலம் முழுவதும் 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுக்-அவுட் சுற்றறிக்கை அனுப்பப்பட்டவர்களில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ம் தேதி திங்கட்கிழமை மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.


இதையொட்டி இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல், பம்பை ஆகிய இடங்களில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.