இந்துக்களின் புனிததலமான பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை துவக்கம்!
இமயமலைப்பகுதியில் உள்ள புனிததலமான பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை இன்று துவங்கியது!!
இமயமலைப்பகுதியில் உள்ள புனிததலமான பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை இன்று துவங்கியது!!
இந்துக்களின் மிக முக்கியமான புனித நகரம் கேதார்நாத். இது வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமன் ஜோதிர்லிங்கமாக காட்சிதந்து நமக்கு அருள்பாலிக்கிறார். இமயமலைத் தொடரில் மிக அழகிய இடத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது.
உயர்ந்த சிகரங்களும் புனிதமிக்க மந்தாகினி நதியும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கேதர்நாத், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆதி சங்கராச்சாரியாரால் 8ம் நூற்றாண்டில் இக்கோவில் புனரமைக்கப்பட்டது. அவரது சமாதியும் இங்கு அமைந்திருப்பதுதான் இந்துக்களின் மிக முக்கியமான புனித தளமாக கேதர்நாத்தை உயர்த்தியுள்ளது.
சத்திய யுகத்தில் வாழ்ந்த அரசர் கேதாரின் நினைவாக இந்நகரம் கேதார்நாத் என்ற பெயரை பெற்றது. மேலும், அவரது மகள் விருந்தா, லக்ஷ்மியின் அவதாரம் என்பதால் கேதார்நாத் நிலம் விருந்தவன் என்ற பெயரை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கையின் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்களும் ஒன்றான ரிஷிகேஷில் இருந்து 223 கிமீ தொலைவில் கேதார்நாத் அமைந்துள்ளது. மந்தாகினி நதி அருகே இருக்கும் கோயில், கடல்மட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படும். கோயிலை சுற்றி இமயமலையும், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. புனித யாத்திரை மற்றும் மலையேற்றப் பயிற்சிகளுக்கு நம்மை ஈர்க்கக்கூடிய இடமாகவும் இது அமைந்துள்ளது. சாலை வழியில் இக்கோயிலை நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14கிமீ தொலைவில் மலை ஏறியே இக்கோயிலை சென்றடைய முடியும். அதனால் பஸ், கார், வேன் போன்ற வாகனங்கள் கௌரிகுண்ட் வரை மட்டுமே செல்லும்.
கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பைரவா கோயிலும் அங்கு சிறப்பு வாய்ந்தவை. மேலும், கேதார் மாசிப், குப்தகாசி, கேதார்நாத் மலை, வாசுகி தால் ஏரி, மந்தாகினி ஆறு, சரோபாரி தால் ஏரி ஆகிய இடங்களையும் கண்டு ரசிக்கலாம். குளிர்காலத்தில் ஏற்படும் கடும் பனிபொழிவால், கேதார்நாத் கோயில் ஆறு மாதத்திற்கு (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) மூடப்பட்டுவிடும். கோயிலை மூடுவதற்கு முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். கோயிலை மீண்டும் திறக்கும் போதும் அந்த விளக்கு அணையாமல் எறிந்து கொண்டு இருக்கும். அதை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு படையெடுப்பார்கள்.
இந்நிலையில், மே 9 தேதி (இன்று) முதல் Char Dham Yatra நடைபெற உள்ளது. இன்று காலை 5:35 மணியளவில் அதன் பக்தர்களுக்கு அதன் கதவு திறக்கப்பட்டுள்ளது.