நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமால், கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று வீட்டில் உள்ள அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியல் மேற்கொண்டு, புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வது வழக்கம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீபாவளித் திருநாளை பொதுமக்கள் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.



அதிகாலை முதலே பட்டாசு வெடிசத்தத்தால் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்பு, சங்கு சக்கரம், பூத்தொட்டி, ராக்கெட் உள்ளிட்ட வெடிகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரிலும், தொலைபேசியிலும், இணையதள வாயிலாகவும் தீபாவளி வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 


தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றனர். பட்டாசுகளைக் கொளுத்த வேண்டாம் என டெல்லி அரசு கேட்டுக் கொண்ட நிலையில் லேசர் ஒளிக்காட்சி நடைபெற்றது. உணவகங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை, இசை நிகழ்ச்சி என தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிக் காணப்பட்டது.


புனேயில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே இந்திய ராணுவத்தினர் சார்பில் சதர்ன் கமாண்ட் வரலாற்றை விளக்கும் வகையிலான ஒலி ஒளி காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. குஜராத்தின் அக்சர் தாம் கோவிலில் தீபாவளி விழா களை கட்டியது. வண்ண விளக்குகளுடன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.


இதனிடையே வாரணாசியில் உள்ள சம்புர்னந்த் விளையாட்டு அரங்கில் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன.