சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். 


ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.


அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரம். வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார்.


மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்துனர். அன்று முதல் நடராஜப்பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று.