இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. வட இந்தியப் பகுதிகளில் இராவணனைக் கொன்ற நாளாக தசரா என்ற விழாவாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் மகிசாசுரனை தேவி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஜய தசமி என்றால், விஜயம் தருகிற நாள் என்று பொருள்படும். குழந்தைகளுக்கு விஜயதசமியன்று கல்வி, கலைகள் ஆரம்பித்து வைத்தால் வெற்றி உண்டாகும் என்று ஐதீகம். குழந்தைகளின் கை பிடித்து வைத்திருக்கும் நெல்லில் "அ" என்று எழுத வைத்து வித்யாரம்பம் செய்வார்கள். இந்நாளில் தீமைகள் விலகி, நன்மைகள் சேரும் என்பது நம்பிக்கை. விஜய் என்றால் வெற்றி, தசமி என்றால் பத்து. இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.


உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது.