சபரிமலையில் போராட்டம்: பெண் பத்திரிகையாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்டார்!
சபரிமலையில் நடைபெறும் போராட்டம் காரணமாக, பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ் கோவிலுக்கு செல்லும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார்.
சபரிமலையில் நடைபெறும் போராட்டம் காரணமாக, பெண் பத்திரிகையாளர் சுஹாசினி ராஜ் கோவிலுக்கு செல்லும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார்.
கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை பத்திரமாக அழைத்து செல்லும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் பெண் பத்திரிகையாளர் சுஹாசினி தன்னுடன் பணியாற்றுபவருடன் பம்பாவில் இருந்து கோவிலுக்கு செல்ல பயணம் மேற்கொண்டார். பம்பாவில் இருந்து பெண் ஒருவர் கோவிலுக்கு செல்வதை பார்த்த பக்தர்கள் அவரை நோக்கி வந்துள்ளனர். அத்துடன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அவருக்கு அவருடன் வந்தவருக்கும் போலீசார் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் மேற்கொண்ட பயணத்தை தொடங்கினார். இருப்பினும் அவருடைய பாதையை வழிமறித்து போராட்டம் மேற்கொண்டார்கள். இதனையடுத்து நிலையை உணர்ந்துக்கொண்ட சுஹாசினி தன்னுடைய பயணத்தை தொடரலாம் கீழே இறங்கிவிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, எனவே என்னுடைய பயணத்தை பாதியில் விடுகிறேன், பம்பைக்கு திரும்புகிறேன்,” என கூறியுள்ளார்.