சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவனின் மிக முக்கியமான அம்சமே அவர் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தார் என்பதுதான். அவர் எத்தனையோ காரியங்களைச் செய்தார், நடனம் ஆடினார், தியானம் செய்தார், இரண்டு முறை திருமணம் செய்தார். எல்லாம் சரிதான். ஆனால், எல்லாவற்றையும் விட அவர் இன்றும் நம் நினைவில் நிற்பதற்கு முக்கியக் காரணம், அவர் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தது.


பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இன்றும் அவருக்குத் தலை வணங்குகிறோம். ஏனென்றால், அறிதலில் அவருக்கு மாற்றாக ஒருவர் இல்லை. சுதந்திரத்தை அவர் முழுமையாக அறிந்திருந்தார். எனவே, இப்போதைய குறுகிய எல்லைகளைத் தாண்டி உங்கள் புரிதல் வளர்ந்தாலேயொழிய அறிதலுக்கான வழி உங்களுக்கு இல்லை.


Also Read | Disrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ 


பெரும்பாலான மனிதர்கள் எதை உணர்வதில் தோல்வி அடைகிறார்களோ, அதை அவர் உணர்ந்தார் என்பதுதான் சிவனுடைய முக்கியத்துவம். பெரும்பான்மையான மனிதர்களின் பார்வைக்குள்கூட வராத ஒரு அம்சம், அவருடைய ஒரு அங்கமாகவே இருந்தது. அதுதான் மூன்றாவது கண்ணுக்குப் பொருள்.


சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தபோது நெருப்பு வெளிப்பட்டதாகச் சிலர் சொல்வதுண்டு. அது அவருக்குள்ளே இருந்த நெருப்பு என்பதைவிட தனக்கு முக்கியம் என்று எவற்றையெல்லாம் தனக்குள் கருதினாரோ, அவற்றையெல்லாம் அவர் எரித்தார் என்பதற்குத்தான் அது அடையாளம்.


எதையெல்லாம் எரிக்க முடியுமோ, அதையெல்லாம் தனக்குள் அவர் எரித்தார். அதன்பிறகு அவர் உடம்பில் உள்ள ஒவ்வொரு துளையிலும் வியர்வைக்கும், இரத்தத்திற்கும் பதிலாக சாம்பலே வெளிப்பட்டது என்கிறார்கள். அப்படியானால், மொத்த அறியாமையையும் அவர் எரித்து அழித்திருக்கிறார். எவற்றையெல்லாம் உண்மை என்று மனிதர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அவற்றையெல்லாம் அவர் எரித்திருக்கிறார்.


Also Read | சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் தெரியுமா?   


இதைச் செய்த பிறகு மூன்றாவது கண் திறப்பு அவருக்கு நிகழாமல் இருக்க முடியாது. பொதுவாக மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கு என்று இரண்டு வழிகள் உண்டு. ஒரு வழி உள்ளே முழுமையான வெற்றிடமாக ஆவது. அப்படி வெற்றிடம் நிகழும்போது, கதவு உள்ளே வேகமாக இழுக்கப்பட்டு அதன் மூலம் அந்தக் கதவே இல்லாமல் போய் ஒரு திறப்பு நிகழும். அந்தக் கதவானது இற்றுப்போய் உள்ளே ஒன்றும் இல்லாததால் விழுந்துவிடும்.


சிவன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், உறவுகளையும், உடைமைகளையும் மட்டும் எரிக்கவில்லை. தான் என்னும் இருப்பையே மொத்தமாக எரித்திருக்கிறார். ஒரு முழுமையான வெற்றிடம் அதில் அமைந்திருந்தது. எனவே உள்முகமாகக் கதவு விழுந்து ஒரு திறப்பு நிகழ்ந்தது.


மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கு இன்னொரு வழி என்னவென்றால், எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பது. எண்ணம், உணர்ச்சி போன்றவற்றிற்கு வடிகாலே இல்லை. ஒரு சொல்லைக்கூட நீங்கள் வாய்திறந்து சொல்வதில்லை. சாதாரணமாக நீங்கள் நான்கு நாட்கள் மௌனமாக இருந்தாலே, திடீரென்று ஐந்தாவது நாள் உங்களுக்குப் பாடத் தோன்றும். உங்களுக்கு பாடத் தெரியவில்லை என்றால், ஊளையிடவாவது செய்வீர்கள்.


Also Read | மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு மம்மிகளை எப்படி பதப்படுத்துவது?


ஏனென்றால், எதையாவது வெளிப்படுத்த விரும்புவீர்கள். ஆனால் எதையுமே நீங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கும்போது, உள்ளே பெரும் அழுத்தம் கூடிக்கொண்டே போய் உள்ளிருந்தே அந்தக் கதவு உடையும், அது இன்னொரு முறை.


இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு நடுநிலையான பாதை வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மிகவும் சாமர்த்தியக்காரராக இருந்தாலும், வாழ்க்கையில் எங்குமே போக வேண்டாம் என்று விரும்பி முடிவெடுத்ததாகத்தான் அர்த்தம். இந்த நடுப்பாதை என்பது உங்களுக்கு வசதியாக இருக்கும்.


ஆனால், இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் முழுநேரம் ஒரு அபத்தக் களஞ்சியமாகவே வாழ்வீர்கள். எங்கே சென்றாலும் சரி, உங்கள் அபத்தங்களையே செய்து கொண்டிருப்பீர்கள். இதுதான் நடுப்பாதை.


Also Read | 83 வயதிலும் குத்தாட்டம் போடும் முன்னாள் முதலமைச்சர்


நீங்கள் எங்கேயும் போகாமல், இந்தப் பாதையே எங்கும் போகாது என்று கடைசியில் முடிவு கட்டுகிறீர்களே, அதுதான் நடுப்பாதைப் பயணம் என்பது.


நீங்கள் ஒரு ஊரில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வழியில் ஒரு மிகப்பெரிய பாறை குறுக்கிடுகிறது. பாறையைச் சுற்றிக் கடந்து போக இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒரு வழியில் ஒரு புலி உறுமிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு வழியில் பெரும் நெருப்பு எரிந்துகொண்டு இருக்கிறது.


அப்படியானால் நடுப்பாதைதான் இருப்பதிலேயே சிறந்தது என்று கருதி பாறை மீது ஏறினால் கொஞ்ச தூரம் உடற்பயிற்சி செய்வீர்களே தவிர, வேறு எங்கேயும் சென்றடைய மாட்டீர்கள். எனவே, ஒன்று நீங்கள் முழுமையாக வெறுமை அடைய வேண்டும். அந்த வெறுமையே ஒரு திறப்பை நிகழ்த்தும். இல்லையென்றால் முழு அழுத்தத்தினால் கதவு உடையும். இந்த இரண்டு வழிகள்தான் இருக்கின்றன.


Also Read | தங்க நாக்குகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு  


இந்த இரண்டில் முதல் வழிதான் சிறந்தது. ஏனென்றால், அழுத்தத்தின் அடிப்படையில் நீங்கள் கதவைத் திறந்தால் அது இன்று திறந்து கொள்ளலாம். ஆனால் நாளை மூடிக் கொள்ளலாம். அல்லது போதிய அழுத்தம் நிகழ்வதற்கு முன்பு வேறு ஏதாவது நிகழ்ந்து நீங்கள் பாதையில் இருந்து விலகி விடலாம்.


ஒரு சின்ன உணர்ச்சியோ எண்ணமோ வெளிப்படுத்தாமல் அழுத்தி வைப்பது என்பது பெரும் சிரமத்திற்குரிய விஷயம். ஒரு சொல்லைக்கூட சொல்லாமல் எதையும் வெளிப்படுத்தாமல் ஒரு அபிப்ராயம் எதையும் சொல்லாமல், மனதில் எழும் எல்லாவற்றையும் அடக்கி வைத்தால் அது சில நேரம் வெடித்துப் போகக்கூடும். ஆனால் அது வெடித்துப் போகா வண்ணம் உங்களுக்குள் திடமாக இருத்தி வைத்தால் உங்கள் மூன்றாவது கண் திறந்து கொள்ளும்.


Also Read | வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR