ஐப்பசி மாத பூஜைக்கு கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை கோவில் நடை இன்று காலை 10 மணிக்கு அடைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தது. மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.


அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த 19-ம் தேதி கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் சபரிமலைக்கு வந்தனர். ஐயப்ப சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.


இதைப்போல நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் ஒருவரும், பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இதேபோல் ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் இருந்த வசந்தி (வயது 40), ஆதித்ய சேஷி (42) உள்பட சில பெண்களை பம்பை அருகே தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், இந்த 2 பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அந்த குழுவில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிற பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


இதைப்போல ஆந்திராவை சேர்ந்த பாலம்மாள் (47) என்ற பெண்ணும் நேற்று மதியம் சபரிமலைக்கு வந்தார். வலியநடை பந்தல் அருகே பாலம்மாளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதைப்போல மேலும் 2 பெண்களும் நேற்று சபரிமலைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.


சபரிமலையில் நடை திறக்கப்பட்ட 17-ம் தேதியில் இருந்து நேற்று வரை, தடை செய்யப்பட்ட வயதுடைய மொத்தம் 12 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று நடை அடைக்கப்படுகிறது. அங்கு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் மீண்டும் நடை திறக்கப்படும்.