திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் பந்தனம் திட்டாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை முதல் வரும் 13-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவோண பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார். பின்னர் இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 10-ஆம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார்.


பின்னர் 11-ஆம் தேதி திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும். 13-ஆம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


இதனிடையே சபரிமலை பிரச்னை குறித்து, பந்தளம் மன்னர் ரேவதிநாள் ராமவர்ம ராஜா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, சபரிமலை கோவிலை நிர்வகிக்க சிறப்பு தனி சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என, கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.