12:34 18-04-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் டிஷ்மிஸ் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.



தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். 


காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுவரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 


இந்த சந்திப்பின் இறுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 


இது தொடர்பாக கருத்து கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்:- 


கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? அது ஒரு மர்ம மாளிகை போன்று உள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக ஆசை வார்த்தை கூறிய பேராசிரியையின் பின்புலத்தில் யார் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். 


நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இந்த பிரச்சினையில் சிக்கி சந்தேகத்திற்கு ஆளாகி உள்ள தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும். பிரதமரும், ஜனாதிபதியும் கலந்து பேசி தமிழக கவர்னரை பணி நீக்கம் செய்யவேண்டும். 


இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னையில் (இன்று) காலை 10.30 மணிக்கு தமிழக கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.