காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுவதும் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், வானில் கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.


சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்களும் கருப்பு சட்டை அணிந்து கிண்டி போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அப்போது 2 ஆயிரம் கருப்பு பலூன்களையும், ராட்சத பலூன்களையும் வானில் பறக்க திட்டமிட்டுள்ளனர்.


இதை யடுத்து, பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி நாம் தமிழர் உள்பட தமிழ் அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தலாம் என்பதால், போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.