டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இன்று (திங்கள்கிழமை) பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மருத்துவ சங்கம் (IMA) அழைப்பு விடுத்துள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் உள்ளது.


டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (Aimes) முன்பு பயிற்சி மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுதவிர மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, ஏழை எளிய மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 


மருத்துவப் படிப்பு மற்றும் சேவையை மாநில அரசிடம் இருந்து முழுமையாக தங்கள் வசம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது என்றும் குறைகூறியுள்ளது.