அரசு ஊழியர்,  ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் அச்சாணிகளாகத் திகழும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும்; மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் உறுதியாக நம்புகிறது.


அரசு ஊழியர்களின்  அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் அத்தகைய நிலையை உறுதியாக ஏற்படுத்த பா.ம.க. உறுதி பூண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதற்காக முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கை புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது தான்.


Also Read | BJP பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி


இந்தக் கோரிக்கைக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை வலியுறுத்தி நிறைவேற்றித் தர பா.ம.க. பாடுபடும். அரசு ஊழியர்களின் நலன்களை உறுதி செய்வது தான் பாமகவின் நோக்கம்.


நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் தவறான பரிந்துரைப்படி குறைக்கப்பட்ட அரசு பொறியாளர்கள், நில அளவை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் ஆகியோரின் ஊதியங்கள் முன்பிருந்த நிலைக்கு உயர்த்தப்படும்; இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் சரி செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்; அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற தனி ஆணையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள பா.ம.க. அவற்றை நிச்சயமாக நிறைவேற்றித் தரும்.


Also Read | வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்


போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும்; ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும்  உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பது பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அவையும் நிறைவேற்றப் படுவதை பாமக உறுதி செய்யும்.


அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு 01.06.2006 அன்று பணி நிரந்தரம் செய்யப்பட்ட 45,000 ஆசிரியர்கள், நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய 23 மாதங்கள் அவர்களின் பணிக்காலமாகச் சேர்க்கப்படும்; அரசு பல்கலைக் கழகங்களிலும், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலும் தொகுப்பூதியத்தில்  பணியாற்றுவோர் அனைவரும் பணி நிலைப்புச் செய்யப்படுவர்.


அரசு ஊழியர்களில் 40 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு 12 நாட்களில் இருந்து 24 நாட்களாக அதிகரிக்கப்படும் - மகப்பேறு விடுப்பு ஓர் ஆண்டாக அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பாமக கண்டிப்பாக நிறைவேற்றும்.


Also Read | வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது: அதை நீக்க முடியாது!


தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாகக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3500 வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்சப் பணிக்காலம் 30 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.


அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் அனைத்து வகையான ஓய்வூதியப் பயன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பா.ம.க. வழங்கியுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் வசந்தமும், மகிழ்ச்சியும் வீசுவதை பா.ம.க. உறுதி செய்யும்.


பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


 ALSO READ |  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR