ஜாட் மன்னர் பெயரில் பல்கலை., அமைக்கும் யோகி ஆதித்யநாத்...
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரிடப்பட்ட அரசு பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது!
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரிடப்பட்ட அரசு பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது!
முன்னதாக., ராஜா மகேந்திர பிரதாப் சிங் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக (AMU) கட்டுமானத்திற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கியதாக குறிப்பிட்ட பாஜக தலைவர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தை ஜாட் மன்னர் பெயரில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு அரசியல் சர்ச்சையை ஏற்படுவதை விரும்பாத மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் ஒரு புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்க முடிவு செய்தார்.
இது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் யோகி அரசாங்கம் நிறைவேற்றியது, பின்னர் செவ்வாய் அன்று இதுதொடர்பான அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.
உயர்கல்வி துறை இலாகாவை வைத்திருக்கும் துணை முதல்வர் தினேஷ் சர்மா இதுகுறித்து தெரிவிக்கையில்., “இதுதொடர்பான கோப்புகள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரிடப்பட்ட பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் நடவடிக்கை, கட்சியிலிருந்து மெதுவாக விலகிச் செல்லும் ஜாட்களை வென்றெடுப்பதற்கான பாஜக-வின் நடவடிக்கையாக பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு உத்திர பிரதேசத்தில் பாஜக-வை விட பகுஜன் சமாஜ் கட்சி அதிக பலம் கொண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது. அண்மையில் நடந்த ஹரியானா தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறிய நிலையில், வளர்ந்து வரும் JJP-யின் ஆதரவோடு அரசாங்கத்தை அமைத்த போதிலும் இது தெளிவாகத் தெரிந்தது.
முன்னதாக, உத்திரபிரதேசத்தின் அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றியதற்கு அம்மாநில முதல்வர் யோகி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.