‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்’ என்ற பெயரில் பிரதமர் மோடி குறித்து அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டு டைம்ஸ் பத்திரிக்கை தற்போது ‘வேறு எந்த பிரதமரும் சாதிக்காத வகையில் இந்தியாவை மோடி ஒருங்கிணைத்துள்ளார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த போது அமெரிக்காவின் டைம்ஸ் இதழ் மோடி குறித்த கட்டுரை ஒன்றை மே மாதத்தின் தொடக்கத்தில் வெளியிட்டது. 


இந்த கட்டுரையில் ‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்’ என பிரதமர் மோடி சித்தரிக்கப்பட்டார். இந்திய அரசியல் அரங்கை அதிரச்செய்த இந்த கட்டுரை மீது பெரும் விவாதங்கள் நிகழ்ந்தது. குறிப்பாக எதிர்கட்சியினரின் பிரச்சாரத்தில் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட இக்கட்டுரை குறித்த பேச்சு முக்கியமான அம்சமாகவும் இருந்தது.


இந்நிலையில் நேற்று டைம்ஸ் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து புதிதாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.


புதிதாக வெளியாகியுள்ள இந்த கட்டுரையில் ‘கடந்த 50 ஆண்டு காலத்தில் இந்தியாவின் எந்த ஒரு பிரதமரும் சாதிக்காத வகையில் இந்தியாவை மோடி ஒருங்கிணைத்துள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையினை மனோஜ் லத்வா என்பவர் எழுதியுள்ளார்.


60 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வாக்களித்த வரலாற்றின் மிகப் பெரும் தேர்தல் திருவிழாவில் பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியான வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த தேர்தல் சம்பிரதாய தேர்தலாக இருக்கவில்லை, எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி தன்னாலான யுக்திகளை கையாண்டார். மோசமான பிரச்சார பாணி இந்த தேர்தலில் கையாளப்பட்டது.


மோசமான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள், திட்டங்களும் நீண்ட நெடிய நாட்களாக விமர்சிக்கப்பட்டு வந்தது. எனினும் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சுமார் 50 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதமரும் இந்த வகையிலான பெரும்பான்மையுடன் தேர்தெடுக்கப்படாத வகையில் பாஜக கூட்டணிக்கு 50% சற்று குறைவான அளவுக்கு பெருவாரியான வாக்குகள் கிடைத்துள்ளது. 


பிளவுவாதி என்று விமர்சிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் எப்படி அரியணையை பிடித்தார்? அவருடைய ஆதரவு வட்டாரத்தை எப்படி அதிகரிக்கச் செய்தார்? அதற்கு ஒரே காரணம் தான், வர்க்கப் பிளவு என்ற மோசமான ஒன்றை மோடி சரி செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகவகுப்பில் பிறந்த நரேந்திர மோடி, மிகவும் உயரிய இடத்தை அடைந்துள்ளார். நேரு குடும்பத்தினர் கடந்த 72 ஆண்டுகளாக செய்யத்தவறிய வகையில் உழைக்கும் வர்க்கத்தையும், ஏழை மக்களையும் அவர் அரவணைத்துச் சென்றுள்ளார். இதனால் மோடிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது.


ஏழை மக்களுக்கு நிறைவேற்றிய நலத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி. அவரின் சமூக முற்போற்கு கொள்கைகள் ஹிந்துக்களையும், பிற மத சிறுபான்மையினரையும் ஒரு சேர வறுமையின் பிடியில் இருந்து மிக வேகமாக வெளிக்கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது அக்கட்டுரை.


ஒரே மாத்திற்குள் இரு வேறு வகையிலாக பிரதமர் மோடியை இகழ்ந்தும், புகழ்ந்தும் டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.