மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணி குறித்து திட்டவட்டமான பேச்சு எதுவும் இல்லாததால், சிவசேனா உதவியின்றி ஓரிரு நாட்களில் அரசாங்கத்தை அமைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்றக் கட்சியின் தலைவராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவேந்திர ஃபட்னாவிஸின் தற்போதைய பதவிக்காலம் வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு முடிவடைவதால் அன்றைய தினத்திற்கு முன் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதன் அன்று பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாஜக துணைத் தலைவர் அவினாஷ் ராய் கன்னா ஆகியோர் தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 105 எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது..


சிவசேனாவுடன் கூட்டணியோ அல்லது இல்லாமல் அரசாங்கத்தை அமைக்க பாஜக தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும், சிவசேனா தனது அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கும் என ஃபட்னாவிஸ் பின்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், சிவசேனாவின் 50;50 சூத்திரத்திற்கு இடமில்லை எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தானே முதல்வராக இருப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 


மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிய கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களின் உதவியை பாஜக நாடும் என கூறப்படும் நிலையில், சமீபத்தில், சந்திரபூர் தொகுதியின் சுயாதீன எம்.எல்.ஏ கிஷோர் ஜோர்கேவர் மற்றும் சூரஜ்ய சக்தி கட்சி தலைவரும் ஷாஹுவாடி (கோலாப்பூர்) எம்.எல்.ஏ வினய் கோரே ஆகியோர் ஃபட்னவிஸை சந்தித்து பாஜகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் (Maharashtra Assembly Elections 2019) தெளிவான பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. 


288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் மொத்தம் 105 பாஜக MLA-க்கள் வெற்றி பெற்றுள்ளனர், சிவசேனா 56 இடங்களை வென்றுள்ளது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக-விற்கு போதுமான எண்ணிக்கை இல்லை. என்றபோதிலும், பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் பாஜக-விற்கு சிவசேனா தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுமாயின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து வென்ற ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது சிவசேனா.


உத்தவின் நிலை கருத்தில் கொள்ளப்பட்டால், முதல்வரின் நாற்காலி இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்குச் செல்லும், மீதமுள்ள காலம் பாஜக முதல்வர் தலைமையில் இருக்கும். இதனிடையே சிவசேனா, அமைச்சரவையிலும் 50% பங்குகளை கோருகிறது. மேலும், முதல் காலத்திற்கு சிவசேனா முதல்வர் நாற்காலி கிடைக்கவில்லை என்றால், உத்தவ் தாக்கரே, உள்துறை, நிதி, வருவாய், நகர அபிவிருத்தி, வன மற்றும் கல்வி அமைச்சுகளை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறார். சிவசேனாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஆதித்யா மகாராஷ்டிராவின் இளைய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.


ஆனால், அதிகாரப்பகிர்வுக்கு ஒப்புக்கொள்ளா பாஜக சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உதவியுடன் ஆட்சியை அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.