புதுடெல்லி சாந்தினி சௌக் தொகுதி எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம் ஆத்மி கட்சியில் கடந்த 6 வருட பயணம் முடிவுக்கு வருவதாகவும் அல்கா லம்பா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "விடைபெறும் நேரம் வந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். 6 வருட பயணம் முடிவுக்கு வருகிறது." என தெரிவித்துள்ளார்.



மேலும் அல்கா லம்பா, ஜனசபா மூலம் தனது தொகுதி மக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.


ஆம் ஆத்மி கட்சியுடன் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் அல்கா லம்பா, இரண்டு நாட்கள் முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.


சுமார் 50 நிமிடங்கள் சோனியாவை அல்கா லம்பா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. டெல்லி  சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த  நிலையில்,  அல்கா லம்பா சோனியா காந்தியை சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இச்சந்திப்பை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்ற ஊகங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுள்ளார்.



ஊகங்களுக்கு ஏற்றார் போல், சமீப காலமாகவே அவர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். ஆம் ஆத்மியில் இணைவதற்கு முன்னதாக அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியின் மகளிரணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.