இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என முன்னாள் MP அன்வர் ராஜா கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியாள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவி காலம் ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னதாக மக்களவை தேர்தலில் முக்கிய தலைவர்கள் பலரும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் அதிமுக-வில் மாநிலங்களவை உறுப்பினராக பலர் போட்டியிட்டு வருகின்றனர். இதற்காக கட்சி மேலிடத்தில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.


அந்த வகையில் முன்னாள் MP-யும், தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவருமான அன்வர் ராஜா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். 


இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கட்சியின் தலைமை முடிவு செய்திருந்தது என்பதை அனைவரும் அறிவர்.


ஆனால் நமது கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதால் அங்கு வேட்பாளராகும் வாய்ப்பு கடைசி நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை.


மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், யாதவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் அகமுடையார் வகுப்பைச் சார்ந்த கோ.அன்பழகன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிறைகுளத்தான், யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.


முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் சமூதாயத்தைச் சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.


எனவே இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்வில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் அதிமுக-விற்கு விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன்." என குறிப்பிட்டுள்ளார்.