கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள 15 தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில், அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று, இம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியினை அறிவித்தார்.  மேலும் நாடுமுழுவதும் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டார்.


இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியினை முன்னாள் பிரதமர் தேவகவுடா துவக்கி இருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.


மேலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த 15 தொகுதிகளில் குறைந்தபட்சம் 8 முதல் 10 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என குமாரசாமி குறிப்பிட்ட குமாரசாமி, அனைத்து தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாரதீய ஜனதா அரசு பதவி விலக நேரிடும் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் தொகுதியில் அவர்களை கேட்காமலேயே மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என குமாரசாமி அறிவித்திருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.