தகுதி நீக்கத்தை எதிர்த்து கர்நாடக எம்எல்ஏக்கள் மகேஷ், ரமேஷ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகிய 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக முதலமைச்சர் BS.எடியூரப்பா தனது பெரும்பான்மையை சட்டசபையில் இன்று நிரூபிக்கவுள்ளார். நான்காவது முறையாக கர்நாடகா முதல்வராக பதவியேற்று மூன்று நாட்கள் கழித்து. பாஜக தனது 105 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.


கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.


இதையடுத்து, 105 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.


இதற்கிடையே, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகேஷ், ரமேஷ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் ஆகிய மூவரும் இன்று  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 



கர்நாடக சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர், இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.