கர்நாடக அதிருப்தி MLA-கள் 3 பேர் தகுதி நீக்கம்..சபாநயகர் அதிரடி..!
கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் உட்பட 3 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்!!
கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் உட்பட 3 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்!!
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு ஆட்சியமைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் மேலிடத்தில் இருந்து அனுமதி கிடைக்காததால், ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் எடியூரப்பா அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான ரானெ பென்னூர் தொகுதி எம்எல்ஏ சங்கர், கோகக் மற்றும் அதானி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் மகேஷ் குமுதஹாலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 15-வது சட்டசபை கர்நாடகத்தில் கலைக்கப்படும் வரை, அவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் குறிப்பிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும், பாஜக அரசு அமையும் போது அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படும் நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 3 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.