சென்னை: சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர் இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  இதனையடுத்து வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிக்கையில் அவர் கூறியதாவது, "முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில், பலநூறு கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளன என்பதை அறப்போர் இயக்கம் வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. 


இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எஸ்.பி.வேலுமணியோ சர்வ சுதந்திரமாக தமிழகம் முழுக்க சுற்றிவந்து ‘சத்ரு சம்கார’ யாகங்கள் செய்துகொண்டிருக்கிறார். 



இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது,


டெண்டர் எடுத்த தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன,  தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இப்படி முறைகேட்டுப் பட்டியல் விரிவாகப் போகிறது.   


இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், எஸ்.பி.வேலுமணியின் ”அசுர பலத்தை” மனதில் கொண்டும் அவரை இலஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்யவேண்டும். தாமதிக்கும்பட்சத்தில், ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிப்பது, சாட்சிகளைக் கலைப்பது, வழக்கின் விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது போன்றவற்றை எஸ்.பி.வேலுமணி மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 


Also Read | எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே


மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் விரைவாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்ற செய்திதான், எந்தவிதக் கூச்சமுமின்றி தொடர்ந்து இலஞ்ச-ஊழலில் ஈடுபட்டு வருவோர்க்கு தரப்படும்  எச்சரிக்கையாக இருக்கும். 


எஸ்.பி.வேலுமணி விவகாரம் மட்டுமல்ல, இலஞ்ச-ஊழல் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும் இலஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். 


புற்றுநோயாக சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிராக, வலுவாகப் போராடிவரும் அறப்போர் இயக்கக் குழுவினரின் அறப்போர் தொடர வாழ்த்துகள்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் செந்தில் ஆறுமுகம்.


Also Read | நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டிய அண்ணன்கள் EPS, OPS-க்கு நன்றி: வேலுமணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR