மோடி நினைத்தால் கர்நாடகாவை போல தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முடியும்!
நாடாளுமன்றத்திற்கு தற்போது சென்றுள்ள நமது எம்பிக்கள் கில்லி போன்றவர்கள் என்று வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
நாடாளுமன்றத்திற்கு தற்போது சென்றுள்ள நமது எம்பிக்கள் கில்லி போன்றவர்கள் என்று வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் களம் காண்கின்றனர். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால் நிச்சயம் கே.வி.குப்பம் இடையே சிப்காட் தொழிற்சாலை கொண்டு வரப்படும். இதன் மூலமாக வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டுவரப்படும். நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்னும் 5 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடியின் கதை கந்தல் தான். மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார், கனவு காண்கிறார் என எடப்பாடி கூறிக்கொண்டு இருக்கிறார். நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள்.
ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழ வில்லையா? நிச்சயம் இந்த அரசு கவிழும். தேனியில் அ.தி.மு.க வெற்றி பெற்ற கதை உலகிற்கே தெரியும். வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களின் பிரச்சினைக்காக நாள்தோறும் குரலெழுப்பி வருகின்றனர். அவர்களின் குரலுக்கு வலு சேர்க்க கதிர் ஆனந்த் வெற்றி உதவும். சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்ற 22 இடங்களில் 13 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. திருவாரூர் தவிர்த்து 12 இடங்கள் அ.தி.மு.கவின் இடங்கள். அதிலும் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சயம் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.
தி.மு.க ஆட்சிக்கு வரும். எதிர்த்து நிற்கும் வேட்பாளரின் பெயரை எல்லாம் சொல்லி அவருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. அவர் வெற்றிபெற்றால் பத்தோடு பதினொன்றாக அடிமைகளோடு அடிமையாக இருப்பார். ஏற்கெனவே தி.மு.க 23 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க உள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க தான் அதிக சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல். ஆனால் சதியின் காரணமாக தேர்தல் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணி தேர்தல் நிறுத்தப்பட்டது. தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்த முயன்றவர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் அளித்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.