தேனி: இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 39 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியாகின. ஆரம்ப முதலே திமுக தலைமையிலான கூட்டணி முன்னணி வகித்தது. இறுதியில் 39 தொகுதியில் 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.


ஆம், தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ரவீந்திரநாத் குமார் மற்றும் இளங்கோவன் இடையே கடும் போட்டி நிலவியது. சில சுற்றுகளுக்கு பின்னர் தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் முன்னிலை வகித்து வந்தார். 


அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகளும், காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகளும் பெற்றனர். இறுதியில் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். 


தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி தேனி மாவட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.