டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்க்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை SpiceJet நிறுவனம் அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. 


இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி ஓட்டு போடுவதற்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை SpiceJet விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 


இது குறித்து  SpiceJet நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய்சிங் கூறுகையில்.... வாக்களிப்பது ஜனநாயகத்தின் முக்கிய கடமை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது மக்களில் பலர் சொந்த இடத்தில் இருந்து விலகி வெளியூர்களில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களால் ஓட்டு போடும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.


எனவே, டெல்லி வாக்காளர்கள் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க உதவவும், எல்லைகள் கடந்து எங்கிருந்தும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் எங்கள் நிறுவனம் இலவச டிக்கெட் வழங்குகிறது. இதற்காக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எங்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவு பக்கத்தில் முன்னதாகவே பதிவு செய்திருக்கவேண்டும். இதன் அடிப்படையில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயண சீட்டு வழங்கப்படும்.



பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் அன்று வாக்காளர்கள் வந்து அதே நாளில் திரும்ப தயாராக இருந்தால் அவர்களுக்கு திரும்புவதற்கான டிக்கெட்டும் சேர்த்து இலவசமாக வழங்கப்படும். மாறாக பிப்ரவரி 7 ஆம்  தேதியே வருவதாக இருந்தாலோ அல்லது ஓட்டு போட்டுவிட்டு மறுநாள் (9 ஆம் தேதி) திரும்புவதாக இருந்தாலோ அவர்களுக்கு ஒரு நேரத்துக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.