நதிகள் இணைப்பு குறித்த கட்கரியின் அறிவிப்புக்கு முதல்வர் நன்றி...
கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததின் விளைவாக நீர்நிலைகள் வறண்டு போய் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இனி பெய்யும் மழையை வீணாகாமல் சேமிக்கும் வகையில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக நதிகள் இணைப்பே அமையும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நதிகள் இணைப்பு குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான கருத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவடைந்து பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’, என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின் கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நிதின் கட்கரிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.,
"கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக நீங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த திட்டம் மிக மிக தேவையானது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும். கோதாவரி- கிருஷ்ணா-பெண்ணாறு -காவிரி ஆகிய நதிகளை இணைத்து தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நதிகள் இணைக்கப்படும் பட்சத்தில் காலம் காலமாக எங்கள் வாழ்த்துகள் நீளும்." என குறிப்பிட்டுள்ளார்.