அமெரிக்க அரசால் செய்யமுடியாததை அதிமுக செய்கிறது -முதல்வர்!
அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருவது அதிமுக கட்சி தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத திட்டங்களை தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருவது அதிமுக கட்சி தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் யாரால் நிறுத்தப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
ஆள்வதற்கு சிறந்த கட்சி அதிமுக தான் என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் எந்த அரசும் செய்யாத நலத்திட்டங்களை அதிமுக அரசு தமிழகத்தில் செய்துள்ளது என்றார். பல்லாயிரம் கோடி ரூபாயை கல்வித்துறைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
12,000 ரூபாய் மதிப்பிலான மடிகணினிகளையும் 43.53 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத இந்த திட்டத்தை தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் 6 சட்டக்கல்லூரிகளை தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டிய முதல்வர் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களின் எண்ணங்கள் முழுவதும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டதை நினைவு கூர்ந்த முதல்வர், இப்போது நாள் ஒன்றுக்கு 16,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெறுவதாகவும், இதனால் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
70 லட்சம் ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்த முதல்வர், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள 6 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கி உள்ளது என்ற அவர், 5345 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசு வழங்குகிறது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிலே சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுவதால் எந்த வன்முறை சம்பவங்களும் குறைக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.