பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதுபோல் அரசியல் கட்சியினரும் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் கட்டமாக கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார். மேலும் திண்ணை பிரசாரம் நடத்தி மக்களிடம் ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது அவர் கூறுகையில்;  தமிழகத்தில் நேரடியாக பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. புதுவையில் நேரடியாக நடக்காவிட்டாலும் கவர்னர் மூலம் மறைமுகமாக நடக்கிறது. இதைத்தான் அப்போதே அண்ணா சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.


தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் காலத்தில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அது எடுபிடி ஆட்சி. மத்திய அரசு சொல்வதை கேட்கக்கூடிய ஆட்சி. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கேள்வி கேட்காத ஆட்சி. தட்டிக்கேட்கும் திராணி தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆனால் கவர்னரின் செயல்பாடுகளை புதுச்சேரி முதலவர் நாராயணசாமி கேட்கிறார். அவருக்கு கெத்து இருக்கிறது. ஜனநாயகத்தை காக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். தமிழகத்தில் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். எதிர்த்தால் பதவிபோய்விடும் என்பதால் அடிமைப்பட்டு கிடைக்கிறார்கள். மேலும் அவர்களது முறைகேடுகள் எல்லாம் சி.பி.ஐ.யின் பிடியில் உள்ளது. பதவி போனால் அடுத்த நிமிடம் ஜெயிலில் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார். 


அதேபோல் இன்றும், நாளையும் அவர் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். டி.புதுப்பாளையம், ஆசூர், மேலக்கொந்தை, பனையபுரம், தொரவி, வாக்கூர், ராதாபுரம், சிந்தாமணி, திருவாமாத்தூர், ஒரத்தூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி ஆகிய கிராமங்களில் 2 நாட்களும் திறந்த வேனில் சென்று தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு வேட்டை நடத்துகிறார்.