பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: PMK
பொது இடங்களில் புகைபிடித்தலை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
பொது இடங்களில் புகைபிடித்தலை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!
இந்தியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், அந்தத் தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களை புகையிலை சார்ந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டத்தை செயல்படுத்துவதில் அரசு எந்திரம் காட்டும் அலட்சியம் மிகவும் வேதனை அளிக்கிறது.
பொது இடங்களில் புகைப் பிடிக்கும் பழக்கம் காரணமாக, எந்த பாவமும் செய்யாத குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பொது இடங்களில் பிடித்து விடப்படும் புகையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதுடன், கடுமையான எதிர்ப்புகளையும் முறியடித்து 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாள் முதல் அதை நடைமுறைக்கும் கொண்டு வந்தார். அதன்பின் சில ஆண்டுகள் மட்டும் மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்ட இந்தத் தடை பின்னர் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் இப்போதும் பலர் தடையின்றி புகைப்பிடிப்பதை பார்க்க முடிகிறது.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்த போது பெண்களும், குழந்தைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் புகைப்பிடிப்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் தொல்லையின்றி நடமாட முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டதால் பொது அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், குழந்தைகளும் முகத்தை மூடிக் கொண்டே நடமாட வேண்டியுள்ளது. புகைக்கொடுமையிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்காதா? என வெளிப்படையாகவே அவர்கள் குமுறுவதை காணமுடிகிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், கடமை தவறியதன் விளைவாகவே இத்தகைய மோசமான அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட்டாக வேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடிக்கும் தடை நடைமுறைக்கு வந்தது முதல் நடப்பாண்டின் மே 22-ஆம் நாள் வரையிலான 10 ஆண்டுகள் 7 மாதங்களில், பொது இடங்களில் தடையை மீறி புகைப் பிடித்ததாக மொத்தம் 2 லட்சத்து 7,114 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.23 கோடி தண்டம் வசூலிக்கப் பட்டு இருப்பதாக தமிழக அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. புகைத்தடை நடைமுறைக்கு வந்த தொடக்க காலங்களுடன் ஒப்பிடும் போது, பொது இடங்களில் புகை பிடித்ததற்காக தண்டம் விதிக்கப் பட்டவர்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சற்று அதிகம் தான். ஆனால், பொது இடங்களில் புகைப்போரில் நூற்றில் ஒரு பங்கினர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை ஆராயும் போது, தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் மீது மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப் படுகிறது. அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்படுபவர்களிடமிருந்து சராசரியாக ரூ.153 தண்டம் வசூலிக்கப் படுகிறது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் கூடுதலானவர்கள் புகைப்பிடிப்பதாக கூறப்படும் நிலையில், 53 பேர் மட்டுமே பொது இடங்களில் புகைப்பிடிப்பதாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றால், அது கணக்கு காட்டப்படுவதற்காக செய்யப்படும் செயல் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், அதிகபட்சமாக ரூ200-க்கு மேல் எவரிடமிருந்தும் அபராதம் வசூலிக்கப்படுவதில்லை. இது புகைத்தடையை உறுதிப்படுத்த உதவாது.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் பெண்களுக்கும், குழந்தைகளும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொது இடங்களில் பிறர் உள்ளிழுத்து விடும் புகையிலையின் புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் 40% அதிகமாக உள்ளன. பொதுவெளியில் விடப்படும் புகையில் 7000 வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தண்மை கொண்டவை ஆகும். பொது இடங்களில் விடப்படும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
பிறர் இழுத்து விடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள். பொது இடங்களில் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையில், அதை தொடர்ந்து அனுமதிப்பது அறம் ஆகாது. பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்க மாநில, மாவட்ட, வட்டார, கிராம அளவில் குழுக்கள் அமைக்கப் பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. அந்தக் குழுக்கள் செம்மையாக பணி செய்தால் பொது இடங்களில் ஒருவர் கூட புகைப்பிடிக்க முடியாது. பொது இடங்களில் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மக்களைக் காப்பதற்காக புகைத்தடை சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
இதற்காக தனி பறக்கும் படைகளை அமைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் அதிக அளவில் புகை பிடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிரடி ஆய்வுகளை நடத்த வேண்டும். அதிகபட்ச அபராதம் தான் விதிகளை மீறி புகை பிடிப்பதை குறைக்கும் என்பதால், பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு புகைத்தடை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அதிகபட்சமாக ரூ.5,000 அபராதம் விதிக்க வேண்டும்.