உள்ளாட்சி தேர்தலை இதுவரையிலும் நடத்தாமல் இருப்பது ஏன் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என விளக்கமளித்தது.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்துவது தொடர்பான இறுதிப்பணிகளை எப்போது செய்வீர்கள், எப்போது தேர்தலை நடத்துவீர்கள் என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியது. வார்டு வரையறை பணிகள் நடந்து வருவதாகவும், அது முடிந்தவுடன் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. 


முன்னதாக கடந்த மே மாதம், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.


இவ்வாறு முன்னுக்குபின் முரணான தகவல்கள் வந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் கடந்த மே 10-ஆம் நாள் வெளியிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மக்களவைத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி, மாவட்ட ஒன்றியம், கிராம ஒன்றியம் என தனித்தனியாக பட்டியல் தயாரிக்கவும், தேர்தலுக்கான மாவட்ட அதிகாரிகளை நியமிப்பது, வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பாகவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்துக்கது.