கடந்த இரண்டு வாரங்களின் உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புக்களை பற்றிய முக்கிய தகவல்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பலரும் எதிர்ப்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானநிலையில் இன்று சபரிமலை வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு, ராகுல் காந்தி வழக்கு, தெண் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவது குறித்த வழக்கு என 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புகளின் தொகுப்பை நாம் விரிவகா காணலாம்.


சபரிமலை வழக்கு: 


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, காலை தீர்ப்பு வழங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி அளிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். ரஞ்சன் கோகோய், கான்வில்க்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகிய இருவரும் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு என்ற அடிப்படையில், சீராய்வு மனுக்கள் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.


இந்த விவகாரம் நம்பிக்கைகள் தொடர்பாகவும், வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாகவும் தீவிரமான கேள்விகளை எழுப்புவதால், 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், பெண்களை வழிபட அனுமதிக்கும் பிரச்சனை என்பது, சபரிமலை ஐயப்பன் கோவிலோடு நின்றுவிடாமல் மசூதிகள், தர்ஹா, பார்சி மத வழிபாட்டு இடங்களோடும் தொடர்புடைய பிரச்சனையாக இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 7 நீதிபதிகள் அமர்வு, இவற்றையெல்லாம் சேர்த்து விசாரிக்க உள்ளது. 


ரஃபேல் ஊழல் வழக்கு: 


பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மறைகேடு இல்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.14ல் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டது. 


இந்நிலையில், இன்று இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட 3 பேர் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 


ராகுல்காந்தி மீதான வழக்கு: 


ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.


ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே, பிரதமர் நரேந்திர மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக, ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து, டெல்லி பாஜக எம்பி மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக, ராகுல் காந்தி தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.


அதில், ராகுல் காந்திக்கு எதிரான வழக்கைத் முடித்து வைப்பதாகவும், இனி வருங்காலங்களில், ராகுல் காந்தி, நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பேசும்போது, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுரை வழங்கியிருக்கிறது.


RTI: 


தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலமும் வரும் என கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நேற்று வழங்கப்பட்டது.


அதன்படி, ஆர்.டி.ஐ. சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.  நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்துவதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். 


கர்நாடகா 17 MLA-க்களின் தகுதி நீக்கம்: 


கர்நாடகாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. 14 மாதங்கள் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்ஏக்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. பின்னர் பாஜக அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  மேலும் 2023 ஆம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.  


சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 17 பேர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்வீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிபதிகள் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும் அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்ஏக்களும் வரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்  எனவும் தீர்ப்பளித்தனர். 


ராம் ஜென்மபூமி வழக்கு: 


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் எங்களுக்கு தான் சொந்தம் என இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற ஊரில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது. 


ஆனால் அந்த இடத்தில் ராமர் கடவுளுக்கு இந்துக்கள் கோவில் கட்டலாம் என்று இந்தியாவின் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது, அதே நேரத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு நகரத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனித்தனியாக வழங்கவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


தென்பெண்ணை ஆறு: 


கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் வழியாக பயணித்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் முக்கிய நீராதாரமாகவும், கிளை ஆறாகவும் விளங்கும் மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடகம் அணை கட்டுகிறது.


இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியாகவே இருந்தாலும், அதில், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி, எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு அரசு முறையிட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டத் தடையில்லை என இன்று உத்தரவிட்டிருக்கிறது.