ஆந்திரா அனந்தபூர் மாவட்டத்தில் ராட்டினத்தில் விளையாடிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரம் மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கோடைக்காலம் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடந்து வரும். ஆண்டுக்கு ஒருமுறை அதும் கோடைவிடுமுறை அன்று நடைபெறும் என்பதால் கூட்டத்திற்கு குறைச்சலே இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பொருட்காட்சியில் கலந்துகொள்வது வழக்கம். 


இந்த ஆண்டும் இந்த பொருட்காட்சியானது கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. மகிழ்ச்சியுடன் பொருட்காட்சியில் இருந்த மின்சார ராட்டினத்தில் பொதுமக்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் ஒரு பெட்டி திடீர் என கழன்று விழுந்தது. 


இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அம்ருதா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 6 பேர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதையடுத்து, மக்கள் ராட்டின ஆப்ரேட்டரை கடுமையாக தாக்கி பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும், இச்சம்பவம் பற்றி பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கும் போதே அதன் போல்ட் கழன்றுவிழும் நிலையில் இருந்ததை கவனித்தோம். இதுகுறித்து அந்த ஆப்ரேட்டரிடம் தெரிவித்தோம். அவர் மதுபோதையில் இருந்தார். நாங்கள் கூறியதை பொருட்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனக் கூறினர்.