அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க அந்நாட்டு நாடாளுமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்களிடையே துப்பாக்கிகள் அதிகம் காணப்படும் அமெரிக்காவில், தினம் தினம் பல துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், பள்ளிகளில், பொது இடங்களில் நடைபெறும் பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களால், ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் கொல்லப்படுகினற்னர்.


இது போன்ற நிகழ்வுகளை தடுக்க, துப்பாக்கி வாங்குவதன் மீது சில கட்டுப்பாடுகளை கொண்டு வர ஒரு தரப்பு வலியுறுத்தினாலும், மற்றொரு தரப்பினர் துப்பாக்கி வைத்திருப்பது தங்களது அரசியல் சாசன உரிமை என கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.


கடந்த மாதம் ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, அந்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க போராட்டங்கள் உருவெடுத்தன. அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொது இடங்களில் போராட்டம் நடத்தி, இதுகுறித்து புதிய சட்டம் கொண்டு வர வலியுறுத்தினர். 


இதை தொடர்ந்து, 'மார்ச் ஆப் அவர் லைவ்ஸ்' என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். முக்கியமாக தலைநகர் வாஷிங்டனில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். 


அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் சுமார் 800 போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போராட்டங்கள் அரங்கேறின. பொதுவாக துப்பாக்கிகளை குறைக்க சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கும், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது கட்சியினர், போராட்டக்காரர்களுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இன்று பள்ளி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.