குஜராத்தின் இரண்டு அரசு மருத்துவமனைகளில் கடந்த மாதத்தில் மட்டும் 179 குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கைக்குழந்தைகள் இறந்திருப்பது தலைப்புச் செய்திகளைப் பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், 2019 டிசம்பரில் குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 179 குழந்தைகள் இறந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.


தரவுகளின்படி, ராஜ்கோட்டில் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், ஜாம்நகரில் இது டிசம்பர் மாதத்தில் 68-ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக நவம்பரில் 71-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ZEE மீடியாவுடன் பேசிய ராஜ்கோட் சிவில் மருத்துவமனையின் சிவில் கண்காணிப்பாளர் மனிஷ் மேத்தா இதுகுறித்து தெரிவிக்கையில், 2019 டிசம்பரில் 111 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்துள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் எடை குறைந்து பிறந்த குழந்தைகளை காப்பாற்றுவது கடினம் என்றும், சில குழந்தைகள் செப்சிஸ் தொற்று காரணமாக இறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில குழந்தைகளின் மரணத்திற்கு பின்னால் பல பிறவி குறைபாடுகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


ஜாம்நகரில், கடந்த ஒரு வருடத்தில் சுமார் 639 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் உயிர் இழந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குன்வந்த் தாகூர், 2019 டிசம்பரில் 85 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மாதத்திற்கு சுமார் 70-80 குழந்தைகள் இறக்கின்றனர். இந்த இறப்புகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணம் என்று தாக்கூர் கூறினார். 


மேலும், மருத்துவமனையில் வசதிகள் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்கள் சேவை தேவையான நேரத்திற்கு ஏற்றவாறு கிடைக்கிறது எனவும் அவர் வலியுறுத்தினார்.


குஜராத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்பது மாதங்களில் 614 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் குழந்தை நிபுணர் இல்லை என்றும், கர்ப்பத்தை சோதிக்கப் பயன்படுத்தப்படும் அல்ட்ராசவுண்ட் இயந்திரம் சில காலமாக இங்கு வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 28 MBBS மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர், அதே நேரத்தில் குறைந்தது 88 மருத்துவர்களுக்கான கோரிக்கை உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டு மகளிர் மருத்துவ நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.