பிரசவத்தின்போது குழந்தைகளின் உடலில் இவ்வளவு ஆபத்தான மாற்றம் ஏற்படுகிறதா?
பிரசவ நொடியில் குழந்தையின் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள், தாய்க்கு 10 மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்களைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமானது.
குழந்தைக்கும் தாய்க்குமான தொப்புள்கொடி உறவு என்பது மிகவும் மகத்தான ஒன்று என்பது உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும். தொப்புள்கொடி உறவு என்பது உணர்வுரீதியாக ஆச்சரியமூட்டும் ஒன்றுதான். ஆனால் இது அறிவியல் ரீதியாகவும் ஒரு அற்புதமான விஷயம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குத் தொப்புள்கொடி மூலம் சத்து நிறைந்த இரத்தம் குழந்தைக்குச் செல்வதும், குழந்தையின் கழிவுகள் இரத்தம் வழியாகவே தாயின் உடலுக்குச் சென்று அது வெளியேற்றப்படுவதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இந்தத் தொப்புள்கொடியின் திடீர் வளர்ச்சி கர்ப்பப்பையைத் தாண்டி தாயின் உடலிலும் சில ரத்தக் குழாய்களை உருமாற்றுகிறது. அதேபோல் தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட சில விநாடிகளில் குழந்தையினுள் மொத்த உயிராதார சுழற்சியும் மாற்றமடைகிறது. பிறந்த குழந்தைக்குள் நிகழும் மாற்றங்களே தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களை விடவும் அதிகம் என்பதுதான் நிதர்சனம்.
கருதரித்ததும், கருப்பைக்குச் செல்லும் தாயின் ரத்த நாளங்கள் பெரிதாகும், கருப்பைக்கு ரத்தவோட்டம் அதிகரிக்கும். காரணம், புரதச் சத்துகள் குழந்தையின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரத்தம் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. தாயின் ஆக்சிஜன் மற்றும் சத்துகள் நிரம்பிய இரத்தம் தொப்புள்கொடி வழியாக முதலில் குழந்தையின் கல்லீரலுக்குச் சென்று பின்னர் அது குழந்தையின் இதயத்திற்குச் செல்லும். பிறகு இதயத்திலிருந்து குழந்தையின் உடல் முழுவதும் இரத்தம் பாயும். பின்னர் இதேபோல குழந்தையின் உடலில் இருந்து ஆக்சிஜன் அகற்றப்பட்ட இரத்தம் தாயின் உடலுக்குச் செல்லும். இதற்கிடையில் குழந்தையின் சிறுநீரகமும் வயிற்றில் இருக்கும்போதே செயல்படத் தொடங்கும்.
மேலும் படிக்க | High Cholesterol பிரச்சனையா? உங்களுக்கு உதவும் இந்த சூப்பர் உணவுகள்
இந்தக் கழிவுகளும் தொப்புள்கொடி வழியாகவே வெளியேறுகிறது. பிரசவித்து தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வரை, தாயின் இதயமே குழந்தையின் உடலுக்கு இரத்த உந்துதலுக்கு ஆதாரமாக இருக்கும். இந்த இரத்தம் குழந்தையின் இதயத்திலிருக்கும் திறந்து மூடக்கூடிய டக்டஸ் ஆர்டிரியோசஸ் (ductus arteriosus) என்று அழைக்கப்படும் குட்டி ஓட்டை வழியாகவே குழந்தையின் உடலுக்குள் பம்ப் செய்யப்படுகிறது.
இப்படி இருக்க, பிறக்கும் தறுவாயில் தொப்புள்கொடிக்கு கிளிப் போடப்பட்டு பின்னர் துண்டிக்கப்படும் அந்த ஒரு வினாடியில், தாயிடமிருந்து குழந்தைக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்வது நிறுத்தப்படும். குழந்தையின் ரத்தவோட்டம் தாய் இதயத்தின் கட்டுப்பாட்டில் இருக்காது. தாயிடம் இருந்து கிடைக்கும் ரத்த சுழற்சி உட்பட்ட அனைத்து உடல்ரீதியான ஆதரவும் நிறுத்தப்படும். அப்போதுதான் சிலிர்ப்பூட்டும் நிகழ்வு இங்கு நிகழ்கிறது. சில விநாடிகளில் குழந்தை அழுகுரல் கேட்டு குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, பச்சிளம் குழந்தையின் உடல் மிகப்பெரிய மாற்றத்துக்குள்ளாகிறது.
குழந்தையின் முதல் அழுகையே குழந்தையின் முதல் சுவாசம். அந்த நொடி குழந்தையின் நுரையீரல் விரிவடைந்து அதிலிருந்த ஆம்னியோடிக் ப்ளுயிட் வெளியேறுகிறது. தொப்புள்கொடி வழியாக ரத்தம் உடலுக்குள் வராததால் உடலில் இருக்கும் ரத்தமானது, கல்லீரல் - இதயம் - நுரையீரல் என்ற வளர்ந்த மனிதரின் ரத்த சுழற்சிக்கு சட்டென்று மாறுகிறது. குழந்தையின் இரத்த அழுத்தம் அதிகரித்து, இவ்வளவு நாட்களாக இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகித்த டக்டஸ் ஆர்டிரியோசஸ் (ductus arteriosus) ஓட்டை மீண்டும் திறக்காமல் உடனடியாக மூடப்படுகிறது.
இந்த மாற்றங்கள் இதயத்தின் இடது ஏட்ரியத்தில் அழுத்தத்தை அதிகரித்து, வலது ஏட்ரியத்தில் அழுத்தத்தைக் குறைக்கிறது. அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் ஃபோரமென் ஓவல் எனப்படும் இதய வால்வை மூடுவதற்குத் தூண்டுகிறது. டக்டஸ் ஆர்டெரியோசஸ் மற்றும் ஃபோரமென் ஓவல் ஆகியவை மூடப்படுவது தப்புள்கொடி வழியாக நடந்து வந்த சுழற்சியை நிறுத்தி பிறந்த குழந்தையின் உடலில் சுயமான இரத்த சுழற்சிக்கு மாற்றுகிறது. இதுபோன்ற இதய வால்வு, ஓட்டைகள் சரியாக மூடப்படாதபோதுதான் இதயத்தில் ஓட்டை எனும் ஆரோக்கியச் சீர்கேடு ஏற்படுகிறது. இவை அனைத்தும் ஒழுங்கு பெற நடப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மேலும் படிக்க | முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா வேண்டாமா? சரியான வழி எது?
10 மாதக் காலத்தில் மெதுவாக நிகழ்ந்த தாயின் உடல் மாற்றத்துடன் ஒப்பிடுகையில், குழந்தையின் உடல் இவையனைத்தையும் சில விநாடிகளில் நடத்துவது எவ்வளவு பெரிய அதிசயம்? மருத்துவர்கள் திறன்பட விநாடிகளை கணக்கிட்டு கண்ணும் கருத்துமாக தாயையும் சேயையும் காப்பாற்றுகிறார்கள் என்பதை குறிப்பிட்டுப் பாராட்டியே ஆகவேண்டும் இல்லையா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR