ரமலானில் பேலியோவைக் கடைப்பிடிப்பது எப்படி? - வழிகாட்டும் மருத்துவர்
ரமலானில் பேலியோவைக் கடைப்பிடிப்பதன் வழிமுறைகளை பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா பகிர்ந்து கொண்டார்.
தமிழகம், புதுவையில் நேற்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நோன்பு 30 நாட்களுக்குக் கடைப்பிடிக்கப்படுவதால் ரமலான் நோன்பில் பேலியோ முறையில் பின்பற்றுவது குறித்த சந்தேகங்கள், குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்தச் சந்தேகங்களைக் களையும் வகையில், குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் ரமலானில் பேலியோவைக் கடைப்பிடிப்பதன் வழிமுறைகளை பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
''ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு புனித மாதமாகும். சங்கைமிகு திருக்குர்ஆன் முதன்முதலில் இறைவனிடம் இருந்து முகம்மது நபி ( அவர் மீதும் அவர் தம் குடும்பத்தார் மீதும் இறைவனின் அருள் உண்டாவதாக) அவர்களுக்கு இறக்கி வைக்கப்படத் தொடங்கியது. இந்த மாதத்தின் நாட்கள் முழுவதிலும் பகலவன் புலர்ந்து மறையும் வரை இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு இருக்க வேண்டும் என்பது நிச்சயிக்கப்பட்ட கட்டாய கடமையாகும்.
இந்நிலையில் பேலியோ கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சந்தேகம். பேலியோவை ரமலானின் எப்படி அணுகுவது என்பதுதான். பேலியோவை ரமலானோடு அணுகுதலில் மூன்று நிலைகளாகப் பிரித்துப் பார்ப்போம்.
முதல் நிலை:
எந்த நோயும் இல்லாதவர்கள் (Persons with no comorbidities)
அதாவது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு , இதய நோய் , மூட்டு வாதம் போன்ற எந்த நோய்க்காகவும் பேலியோவில் இல்லை. நாங்கள் எடைக் குறைப்புக்கு மட்டுமே பேலியோ கடைப்பிடிக்கிறோம் என்பவர்களுக்கு அதிகாலை சூரியன் துயில் களையும் முன் உண்ணும் கடமையான உணவுக்குப் பெயர் - சஹர்.
காலை சஹர் உணவாக 200 மில்லி முழுக்கொழுப்பு பால் அதில் 30 கிராம் வெண்ணெய் கலந்து பட்டர் டீ அல்லது காபி பருகவும் அதனுடன் 4 முட்டைகள் கூட குழம்பு அல்லது 100 கிராம் மாமிசம் எடுக்கலாம் இது ஒரு முழுமையான சஹர் உணவு. சஹர் நேரத்தில் தண்ணீர் - மினிமம் ஒரு லிட்டர் அளவு பருக வேண்டும். அதிகபட்சம் இரண்டு லிட்டர் வரை பருகலாம்.
அந்த ஒரு லிட்டரை 250 மில்லி மோர் +250 மில்லி உப்பிட்ட லெமன் ஜூஸ் + 500 மில்லி தண்ணீர் என்றும் பருகலாம். மாலை சூரிய அஸ்தமனத்தில் நோன்பை விடுவதற்கு
உண்ணும் உணவின் பெயர் - இஃப்தார். பேலியோ உணவு முறையில் இருப்பவர்கள் இஃப்தார் உணவாக 200 கிராம் கலவையான காய்கறிகளில் செய்த சூப் அல்லது காலிபிளவர் ஹலிம் பருகலாம். இது காமன் மேன்கள் பருகும் நோன்புக்கஞ்சிக்கு பதிலாக நாம் பருகும் பானம்.
நோன்பை விடும் போது திரவ உணவாக இருப்பது சிறப்பு ஆதலால் இந்த நடைமுறை. நபியவர்கள் நோன்பை விடுவதற்கு பேரீச்சம் பழம் சிறந்தது என்றும் அது இல்லாத போது தண்ணீர் கொண்டு நோன்பை விடுவது சிறந்தது என்றும் கூறியுள்ளார்கள். ஆகவே, சுன்னத்தைப் பேணும் விதமாக ஒரு பேரீச்சம் பழம் கொண்டு நோன்பை விடுவது சிறப்பு.
இஃப்தார் ஸ்நாக்ஸாக
1.கொய்யா காய்
2. வெள்ளரிக்காய்
3. பன்னீர் வடை
4. பன்னீர் டிக்கா
5.இனிப்பு சேர்க்காத சப்ஜா விதைகள் கலந்த பானம்
6. இனிப்பு சேர்க்காத கடல் பாசி எனும் அகர் அகர்
ஆகியவற்றை எடுக்கலாம்.
இஃப்தாரில் தண்ணீர் - ஒரு லிட்டர் பருக வேண்டும். (250 மில்லி மோர் + 750 மில்லி தண்ணீர் ) தண்ணீரை அதிக குளுமையுடன் குடிப்பது நல்லதல்ல. இது தொண்டையில் புண் உண்டாக்கும் ஆபத்து உண்டு. மண்பானை நீர் பருகலாம். இரவு உணவாக 300 கிராம் அளவு மாமிசம் உண்ண வேண்டும். அது மீனாகவோ, சிக்கனாகவோ, மட்டனாகவோ, பீஃபாகவோ இருக்கலாம்.
உங்கள் இடத்தில் எது செளகரியமாக கிடைக்கிறதோ அந்த மாமிசத்தை உண்ண வேண்டும்.
மேலும் படிக்க | Fourth wave of Covid: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்
இரண்டாம் நிலை
நோய் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்
1.நீரிழிவு இருப்பவர்கள் மேற்சொன்ன உணவு முறையைக் கடைப்பிடிக்கலாம். அவர்கள் நீரிழிவிற்கு போடும் மாத்திரையை காலை சஹர் நேரத்தில் போடக்கூடாது.
( குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள் Hypoglycemia வந்து தலைசுற்றல்/ மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு) மாலை இஃப்தார் உண்ணும் போது மாத்திரையைப் போட்டு விட வேண்டும்.
சர்க்கரை கடந்த மூன்று மாதங்களாக HbA1c 10 என்ற அளவுக்கு மேல் இருப்பவர்கள் நோன்பை இம்முறை முயற்சிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லது. காரணம் இவர்களுக்கு மூன்று வேளையும் மாத்திரைகள் தேவைப்படும். மேலும் சிலருக்கு இன்சுலின் தேவைப்படலாம். இன்சுலினின் தேவை இருக்கும் டைப் ஒன்று மட்டும் டைப் இரண்டு நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் நோன்பு வைக்கக்கூடாது. இது உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
நீரிழிவு நோயாளிகள் நோன்பு வைக்கும் போது கட்டாயம் கையில் எப்போதும் சீனி/ நாட்டு சர்க்கரை வைத்திருக்க வேண்டும். (Hypoglycemia alert) மயக்கம் / படபடப்பு/ தலைசுற்றல் ஏற்பட்டால் உடனே வாயில் போட்டுக்கொண்டு காலை நீட்டிப் படுத்து விட வேண்டும். நோன்பை அதற்குப் பிறகு தொடரக் கூடாது. மருத்துவரை அணுக வேண்டும்.
2. ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் காலை, இரவு இரண்டு வேளையும் மாத்திரை போட வேண்டிய தேவை இருப்பவர்கள் காலை மாத்திரையை சஹர் உணவுக்குப் பிறகும்
இரவு மாத்திரையை இஃப்தாருக்குப் பிறகும் போட வேண்டும். ஒரு வேளை மட்டும் மாத்திரை போட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் , இஃப்தாருக்குப் பிறகு அந்த மாத்திரையைப் போடலாம்.
ரத்தக் கொதிப்புடன் நோன்பு இருப்பவர்கள் தனியாக இருசக்கர வாகனப் பயணங்கள் / வெயிலில் அலைவது போன்ற வேளைகளைத் தவிர்ப்பது நலம்.
3. இதய நோயாளிகள்
நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் காலத்துப் பெண்களுக்கும் நோன்பில் இருந்து விலக்கு உண்டு என்பதால் ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் / இதய ரத்த நாள நோய் இருப்பவர்கள் / ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டவர்கள் / ஸ்டெண்ட் வைக்கப்பட்டவர்கள் யாவரும் நோன்பில் இருந்து விலக்கு பெறலாம். இருப்பினும் நோன்பு வைக்க விரும்பினால், அதில் குறுக்கிடும் உரிமை யாருக்கும் இல்லை.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
இதய நோய் தனியாக வருவதில்லை. கூடவே நீரிழிவு / ரத்தக் கொதிப்பு போன்றவை இருக்கும். ஆகவே , நீரிழிவு / ரத்தக் கொதிப்புக்கு முன் சொன்ன முறைகளில் மாத்திரைகளை எடுக்க வேண்டும். இதய நோய்க்கான மாத்திரைகளை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. நோன்பு வைப்பதற்கு முன் உங்கள் இதய மருத்துவரிடம் ஒப்புதல் பெறுவது நல்லது. இவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு தனியாகப் பயணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் ஆகிறார்கள். எங்கும் இவர்கள் தனியாக செல்ல அனுமதிக்கப்படக்கூடாது.
அடுத்த நிலை: வாரியர் உணவு முறையும் பேலியோவும்
உடல் எடை குறைக்க பேலியோ கடைப்பிடிப்பவர்கள் காலை சஹராக இரண்டு அவித்த முட்டை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் எடுக்க வேண்டும். இஃப்தார் உணவாக 200 கிராம் காய்கறி சூப், இரவு மெகா மீலாக 400 முதல் 500 கிராம் மாமிசம் எடுத்தால் போதும். சஹர் உணவு என்பது கடமையாக்கப்பட்டுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு அவித்த முட்டை உண்ணலாம். அவித்த முட்டையில் ஜுரோ கார்ப் ஆதலால் உடல் கீடோ மோடில் இருந்து விலகாமல் இருக்கும். இதனுடன் அடுத்த பதினான்கு மணி நேர Dry fasting சேரும் போது உடல் எடை குறைவது இலகுவாகும்.
அவசியமான எச்சரிக்கை:
நோன்பு வைத்திருக்கும் போது வெயிலில் அலைவது / அதிக தூரம் நடப்பது / ஓடுவது/ கடின உடற்பயிற்சி செய்வது இவை யாவும் தேவையற்றவை.
காரணம் இவற்றைச் செய்து நோன்பை முறிப்பதற்கு இவற்றில் ஏதோவொன்று காரணமாக ஆகிவிடலாம்.
பின் குறிப்பு
நீரிழிவு / ரத்தக் கொதிப்பு / இதய நோய் போன்ற நோய்கள் இருப்பவர்கள் அவரவர் மருத்துவர்களிடம் காண்பித்து தங்கள் உடலின் நோன்பு இருப்பதற்கான தகுதியை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
கோடை வெயிலுடன் ரமலான் மாதம் சேலஞ்சாக இருக்கப்போகிறது. நீர்ச்சத்துக் குறைபாடில்லாமல் தண்ணீர் பருகி வெயிலில் அலையாமல் நோன்பை நோற்க வேண்டும்''.
இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும் படிக்க | சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G