6 மாரடைப்புக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசய குழந்தை
மும்பையில் இதய பாதிப்புடன் பிறந்து 12 மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் 6 மாரடைப்புக்கு பின்னர் பிழைத்த குழந்தையை மருத்துவமனையில் உள்ளவர்கள் அதிசய குழந்தை என பெயர் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் வசிக்கும் விசாகா மற்றும் வினோத் வாக்மரே தம்பதியினக்கு பிஜே வாடியா மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட அக்குழந்தை 45 வது நாளில் வாந்தி எடுத்து நினைவின்றி மயங்கி விழுந்தது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழுந்தையை தொடர்ந்து பிஜே வாடியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு இதய பாதிப்புடன், தமனிகள் மாறியிருந்தது தெரியவந்தது. குழந்தையின் அமைப்பும், மாறியிருந்தது. கடந்த மார்ச் 14ம் தேதி 12 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதனையடுத்து இதயத்தின் இயக்கம் சீராகி வந்தது. ஆனால், நுரையீரல் சரியாக இயங்கவில்லை.
குழந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தொடர்ச்சியாக குறைந்தது. கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த 51 நாளாக ஐ.சி.யூ.,வில் இருக்கும் குழந்தைக்கு, 6 முறை மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் நுரையீரல் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிக திறன் கொண்ட வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து நுரையீரல் சரியாக இயங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.