கொரோனா பரவாமல் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் இந்தியன் ரயில்வே!
இந்தியன் ரயில்வே துறை `கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னோடியில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக` மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ரயில்வே துறை "கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னோடியில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக" மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பியூஷ் தெரிவிக்கையில்., நாவல் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ரயில்வே முன்னோடியில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் மிகவும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன, இது பயணிகளுக்கு பயணத்தை பாதுகாப்பானதாக்குகிறது என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டது மட்டும் அல்லாமல், இத்துடன் ரயில்களை சுத்தம் செய்யும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நாட்டில் இதுவரை இரண்டு உயிரிழப்புகள் மற்றும் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு எதிரான ஆரம்ப போராட்டத்தில் விமான நிலையங்கள் முதன்மை கவனம் செலுத்தியிருந்தாலும், அரசாங்கம் இப்போது ரயில்வேயிலும் கவனம் செலுத்தி வருகிறது.
ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே பாரிய துப்புரவு பணியை மேற்கொண்டுள்ளது. வைரஸின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முதன்மை பராமரிப்பின் போது ரயில் பெட்டிகள் கிருமிநாசினிகளுடன் சுத்திகரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முக்கிய நிலையங்களின் துப்புரவு ஊழியர்களுக்கு பெஞ்சுகள், நாற்காலிகள், வாஷ்பேசின்கள், குளியலறைகள், கதவுகள் போன்ற பல்வேறு பயணிகளின் தொடர்பு மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே மும்பையில், மத்திய ரயில்வே அதன் 200 ஊழியர்களை புறநகர் ரயில் நிலையங்களில் அமர்த்தியுள்ளது. இந்த குழு கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிந்து, சந்தேகத்திற்குரிய பயணிகளுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுகிறது.
மத்திய ரயில்வேயின் ஸ்டேஷன் மாஸ்டர்கள், டிக்கெட் செக்கர்கள், முன்பதிவு மேற்பார்வையாளர்கள், ரயில்வே மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களின் அவசர மருத்துவ அறைகளில் ரயில்வே பணியாளர்கள் உட்பட கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டும் பயணிகளைக் கையாள்வதில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
67,000 கி.மீ க்கும் அதிகமான பாதை நீளத்துடன் இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்காகும். இந்த பெரிய நெட்வொர்கில் பயணிக்கும் பயணிகளுக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அது நாட்டையே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.