மழைக்காலத்தில் தாக்கக்கூடிய நோய்கள் எவை?
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏற்கனவே தமிழத்தில் டெங்கு பரவி இருக்கும் நிலையில் தற்போது மழை காரணமாக மேலும் பல நோய்கள் வர அபாயம் இருக்கிறது.
அந்த வகையில் மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அநோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும். அந்த நோய்கள் எவை என்பது பார்ப்போம்:-
* மலேரியா
மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்கிருக்கும் இடத்தில் இவ்வகை கொசுக்கள் காணப்படும். எனவே இதை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும்.
* டெங்கு
டெங்கு காய்ச்சல் மழைக்காலத்தில் கொசுக்களால் ஏற்படுவது. இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
* சிக்கன்குனியா
ஏய்டெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. தேங்கிய நீரில் இந்த கொசுக்கள் காணப்படும். இது பகல் நேரத்தில் தான் கடிக்கும். திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி.
* வைரஸ் காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வரும். இந்த காய்ச்சல் 3-7 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும்.
* காலரா
பருவக்காலத்தில் வரும் ஆபத்தான நோய் காலரா. இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். காலரா இருந்தால் வயிற்றுப் போக்குடன் பேதி சேர்ந்து இருக்கும்.