முதியவர்களை மிரட்டும் நினைவாற்றல் இழப்பு: அறிகுறிகள் என்ன? மீள வழி என்ன?
Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
Cognitive Decline: இந்த காலத்தில் வயதானவர்களுக்கு பல விஷயங்கள் மறந்துவிடுவதை அதிகம் காண்கிறோம். இது பல காலமாக இருந்துள்ளது என்றாலும், ஞாபக மறதி துவங்கும் வயது வரம்பு இப்போது குறைந்துகொண்டே வருவதுடன் ஞாபக மறதியால் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.
நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஓக்லாவிலுள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் இணை ஆலோசகர் (நரம்பியல் அறுவை சிகிச்சை) டாக்டர் அபினவ் அக்ரஹாரி, ஒரு உதாரணத்தின் மூலம் இதன் தீவிரத்தை புரிய வைக்கிறார்.
‘சமீபத்தில் ஒரு 68 வயதான பெண் தனது மகனுடன் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவர் உரையாடல்களை நினைவில் கொள்வதில் சிரமப்பட்டார். அவரது பொருட்களை இந்த ஞாபக மரதியால் இழந்துகொண்டிருந்தார். பல சமயம் அவர் கவலையுடன் சுவர்களை வெறித்துக்கொண்டிருப்பதாக அவரது மகன் கூறினார். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியாவில் இந்த நிலை மிகவும் பொதுவானதாகி வருகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 31 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 20% ஆக இருக்கும். அறிவாற்றல் வீழ்ச்சி (Cognitive Decline) என்பது ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறி வருகிறது, இது லேசான பிரச்சனைகள் முதல் டிமென்ஷியா போன்ற தீவிர நிலைகள் வரை செல்லக்கூடும்’ என டாக்டர் அபினவ் தெரிவித்தார்.
Cognitive Decline என்றால் என்ன?
காக்னிடிவ் டிக்லைன், அதாவது அறிவாற்றல் வீழ்ச்சி பிரச்சனை ஏற்பட்டால், நினைவாற்றல், சிந்தனை திறன் மற்றும் அன்றாட பணிகளைச் செய்யும் திறன் ஆகியவை படிப்படியாக குறையத் தொடங்குகின்றன. நமக்கு வயதாகும்போது சில ஆற்றல்கள் குறைவது இயல்பானது என்றாலும், இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது தடையற்ற வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Cognitive Decline: இதற்கான ஆபத்து காரணிகள் என்ன?
வயது இதற்கான ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. குறிப்பாக 65 க்குப் பிறகு, இந்த பிரச்சனைக்கான ஆபத்து அதிகரிக்கிறது. மரபியல் மற்றும் குடும்ப வரலாறு அறிவாற்றல் வீழ்ச்சி தொடங்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள், பக்கவாதம் போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இவை மட்டுமின்றி, உணவுமுறை, உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் இதற்கு வெகுவாக பங்களிக்கின்றன.
Cognitive Decline: இதன் அறிகுறிகள் என்ன?
அறிவாற்றல் வீழ்ச்சிக்கான இந்த பிரச்சனை ஆரம்பத்திலேயே கண்டறியப்படுவது மிக அவசியமாகும். நினைவாற்றல் இழப்பு, குழப்பமான மன நிலை, தான் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல், நேரத்தை பற்றி புரியாமல் இருப்பது, பேசுவதில் அல்லது எழுதுவதில் சிரமம், மனநிலை மற்றும் ஆளுமை மாற்றங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை அட்டகாசமாய் குறைக்கும் இஞ்சி நீர்: 7 நாட்களில் வித்தியாசம் தெரியும்
இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
சில முக்கியமான நடவடிக்கைகள் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை குறைக்கலாம் என டாக்டர் அபினவ் அக்ரஹாரி கூறுகிறார்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நினைவாற்றல் இழப்பு ஏற்படாமல் இருக்க இவற்றை பின்பற்றுவது நல்லது.
- ஆரோக்கியமான உணவுமுறை: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வழக்கமான உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு அறிவாற்றல் வீழ்ச்சியையும் குறைக்கிறது.
- மனதை தூண்டும் நடவடிக்கைகள்: புத்தகம் படிப்பது, புதிர்களை சால்வ் செய்வது, குறுக்கெழுத்துக்கள் (க்ராஸ் வர்ட்), சுடோகு, இசைக்கருவிகளை கற்றுக்கொள்வது, புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை செய்யலாம்.
- சமூக ஈடுபாடு: வலுவான சமூக ஈடுபாட்டின் மூலமும் பலரிடம் பழகுவதன் மூலமும் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தவிர்க்கலாம்.
- சரியான தூக்கம்: மூளையின் செயல்பாட்டிற்கு போதுமான உறக்கம் மிக அவசியமாகும்.
- நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் வைப்பது: உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாகும்.
சிகிச்சை
சில வகையான டிமென்ஷியா அல்சைமர் (Alzheimer), வாஸ்குலர் (Vascular), ஃப்ரண்டோடெம்போரல் (Frontotemporal), லூயி பாடி (Lewy body) போல மீளமுடியாதவையாகவும் இருக்கும். இந்த அறிகுறிகளை மருந்துகள், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் ஆதரவு அமைப்புகள் மூலம் நிர்வகிக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடுகள், தொற்று, வளர்சிதை மாற்றக் கோளாறு, குடிப்பழக்கம், மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படும் மீளக்கூடிய டிமென்ஷியாவில், அதற்கான காரணிகளை உடனடியாகக் கண்டறிந்தால் தேவையான சிகிச்சை கொடுத்து, நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ